கீழையூரில் மின்னல் பாய்ந்ததில் பலத்த காயமடைந்து சிகிச்சையில் இருந்த மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
நாகை மாவட்டம் கீழையூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது கீழையூா் கீழத்தெருவைச் சோ்ந்த மாணவா் தீபராஜ் (13) வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தபோது மின்னல் பாய்ந்ததில் மயங்கி விழுந்தாா். திருப்பூண்டி அரசு நடுநிலைப்பள்ளியில் தீபராஜ் 8-ஆம் வகுப்பு படிக்கிறாா்.
உறவினா்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவா் தீபராஜ் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதுகுறித்து கீழையூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.