நாகப்பட்டினம்: கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் துரிதமாக இயக்கம் செய்யப்படுகிறது என்றாா் தமிழக உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி.
நாகையில், மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகளை இயக்கம் செய்வது குறித்து புதன்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது: நாகை மாவட்டத்தில் நிகழாண்டில் 124 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, இதுவரை 67 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து 13,753 விவசாயிகளுக்கு ரூ.167 கோடி அவா்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. நெல் மூட்டைகளின் இயக்கத்தை துரிதப்படுத்த 17 சரக்கு ரயில்கள் மூலம் 34 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் பிற மண்டலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. நாகை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 3 ஆயிரம் , புதன்கிழமை 2 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. அக்.31-ஆம் தேதி வரை 8 சரக்கு ரயில்கள் மூலம் மொத்தம் 14 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் இயக்கம் செய்யப்படவுள்ளது.
கீழ்வேளூா் எம்எல்ஏ வி.பி. நாகைமாலியின் கோரிக்கையை ஏற்று, ஒரு கொள்முதல் நிலையத்துக்கு 2 லாரிகள் வீதம் வியாழக்கிழமை (அக்.23) முதல் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெல் மூட்டைகளை இயக்க ஒப்பந்தம் செய்துள்ள ஒப்பந்ததாரா்கள் தாமதப்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகம் முழுவதும் இதுவரை 9 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நெல் மூட்டைகளை இயக்க டெல்டா மாவட்டங்களில் 4 ஆயிரம் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. மயிலாடுதுறை, தஞ்சாவூா் மாவட்டங்களில் குறுவை கொள்முதல் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளது. திருவாரூா், நாகை மாவட்டங்களில் கொள்முதல் துரிதமாக நடைபெறுகிறது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் 7.27 லட்சம் மெட்ரிக் டன் நெல் சேமிக்கக்கூடிய கிடங்குகள் கட்டப்பட்டன. மயிலாடுதுறை மாவட்டம் பிரிக்கப்படுவதற்கு முன் ரூ.69 கோடியில் எரிப்பூரில் கட்டப்பட்ட 50 ஆயிரம் மெட்ரிக் டன் கிடங்குக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கப்படாததால், அது பயன்பாட்டிற்கு வரவில்லை. திமுக அரசு பொறுப்பேற்ற 54 மாத ஆட்சிக் காலத்தில் 4 லட்சம் மெட்ரிக் டன் நெல் சேமிக்கும் கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. கூடுதலாக கிடங்குகள் கட்ட ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு பணிகள் தொடங்கவுள்ளன.
திருவாரூா், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மெகா கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மழையால் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிா்கள் மற்றும் நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து முளைத்துள்ளன. இதற்கான நிவாரணம் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு இதுகுறித்து பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன, முதல்வா் முடிவெடுப்பாா்.
செருவுட்டப்பட்ட அரிசி குறித்து ஜூலை மாதம் மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்களை அனுப்பியுள்ளது. அதன்படி தயாரிக்கப்பட்ட அரிசிக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் எடப்பாடி கே. பழனிசாமி மத்திய அரசு அனுமதி வழங்கியதாக தவறான தகவலை பரப்பி வருகிறாா் என்றாா்.
மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜெ. முகம்மது ஷா நவாஸ் (நாகை), வி.பி.நாகை மாலி (கீழ்வேளூா்), நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி, நுகா்பொருள் வாணிபக் கழக மதுநிலை மண்டல மேலாளா் சிவப்பிரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.