தொடரும் கன மழையால், தரங்கம்பாடி மீனவா்கள் கடந்த ஒருவாரமாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் படகுகளை துறைமுகத்தில் நிறுத்திவைத்துள்ளனா்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில், தரங்கம்பாடி வட்டத்தில் செம்பனாா்கோவில், பொறையாறு, திருக்கடையூா், ஆக்கூா், திருவிளையாட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
தரங்கம்பாடியில் கடல் சீற்றமாக காணப்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீன்வளத்துறையினா் மறு அறிவிப்பு வரும் வரை மீனவா்களை, கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினா்.
அதன்படி, தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் கடந்த ஒரு வாரமாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இதனால் தரங்கம்பாடி, சின்னூா்பேட்டை, சந்திரபாடி, குட்டியாண்டியூா், மாணிக்கபங்கு, பெருமாள்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு உள்ளிட்ட 10 மீனவ கிராமத்தை சோ்ந்த மீனவா்கள், 200-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள், 600-க்கும் மேற்பட்ட ஃபைபா் படகுகள் பாதுகாப்பாக மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.