நில அளவைத் துறையில் காலிப் பணியிடங்களால் கோப்புகள் தேக்கம்: எஸ்.யு.சி.ஐ. புகார்
காரைக்கால் நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் உள்ள காலிப் பணியிடங்களால், பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் தேங்கிக் கிடப்பதாக புகார் கூறப்பட்டுள்ளது.
காரைக்கால் நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் உள்ள காலிப் பணியிடங்களால், பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் தேங்கிக் கிடப்பதாக புகார் கூறப்பட்டுள்ளது.
சோஷியல் யூனிட்டி சென்டர் ஆஃப் இந்தியா கம்யூனிஸ்ட் (எஸ்.யு.சி.ஐ.) செயற்குழு உறுப்பினர் ஜே. முகம்மது பிலால், புதுச்சேரியில் உள்ள துறையின் இயக்குநருக்கு திங்கள்கிழமை அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பது : காரைக்காலில் உள்ள நில அளவைத் துறை அலுவலகத்தில் போதிய ஊழியர்கள் இல்லாததால் கோப்புகள் தேங்கிக் கிடக்கின்றன. ஒட்டுமொத்த நிர்வாக அலட்சியத்தால், பொதுமக்கள் தினமும் இந்த அலுவலகத்துக்குச் சென்று தீர்வு காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.
உதவி இயக்குநர் பணியிடம் கலந்த அக்டோபர் மாதம் முதல் காலியாகவுள்ளது. கோரிக்கை அடிப்படையில் இயக்குநரின் முயற்சியால் உதவி இயக்குநர் பொறுப்பில் ஒருவர் நியமிக்கப்பட்டு கோப்புகளுக்கு ஒப்புதல் தரப்பட்டது. அலுவலகத்தின் முதுநிலை வரைவாளர் விடுப்பில் உள்ளதால் 2 மாதங்களுக்கு மேலாக கோப்புகள் தீர்வின்றி முடங்கியுள்ளன.
பட்டா கோரி விண்ணப்பித்த பொதுமக்கள், ஆண்டுக் கணக்கில் அலையவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது விடுப்பில் உள்ள முதுநிலை வரைவாளர் மருத்துவர் ஆலோசனைப்டி மேலும் 6 மாதங்கள் விடுப்பில் இருக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலை ஏற்பட்டால் காரைக்கால் நில அளவைத் துறை செயலிப்பு உறுதியாகிவிடும். இந்த அவல நிலை ஏற்பட்டுவிடால் தடுக்கும் வகையில், புதுச்சேரியிலிருந்து உடனடியாக ஒரு முதுநிலை வரைவாளரை மாற்று ஏற்பாடாக காரைக்காலுக்கு அனுப்பிவைக்க வேண்டும். இதன்மூலம் தேங்கியிருக்கும் கோப்புகளுக்கு தீர்வு காணப்படுவதன் மூலம் அலைந்து கொண்டிருக்கும் மக்கள் நிம்மதியடைவார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.