காரைக்கால்

வடிகால்கள் தூர்வார சிறப்புத் திட்டம்: ஆட்சியர் தகவல்

DIN

காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள அனைத்து வடிகால்களையும் தூர்வார சிறப்புத் திட்டம் வகுத்துள்ளதாகவும், இதற்கான மதிப்பீடுகள் தயாரிக்க அரசுத் துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா தெரிவித்தார்.
காவிரி நீர் வரும் முன்பாக காரைக்கால் மாவட்டத்தில் ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரும் சிறப்புத் திட்டப் பணி மேற்கொள்வது வழக்கம். மாநில அரசின் நிதி தட்டுப்பாட்டால், நம் நீர் எனும் திட்டத்தை மாவட்ட நிர்வாகம் அறிமுகம் செய்து, அரசுத் துறையினர், தனியார் நிறுவனங்கள், கோயில் நிர்வாகங்கள் நிதி பங்களிப்பில் குளம், வாய்க்கால் தூர்வாரும் பணியை செய்து வருகிறது. 
காவிரி நீர் வருவதற்கான சூழல் ஏற்பட்டிருக்கும் நிலையில், இத்திட்டத்தின் நிலை குறித்து ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜாவிடம் திங்கள்கிழமை கேட்டபோது அவர் கூறியது: நம் நீர் திட்டத்தின் கீழ் காரைக்கால் மாவட்டத்தில் அரசுத் துறையினர், தனியார் பங்களிப்புடன் நீர்நிலைகள் தூர்வாரும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதுவரை 90 குளங்கள் தூர்வாரி, தண்ணீர் நிரப்பும் வகையில் தயார்படுத்தப்பட்டுள்ளது. அதுபோல தூர்வாரப்பட்ட குளக்கரையில் மரக்கன்றுகளும் நட்டு, அந்தந்த பகுதியினரை பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 26 குளங்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகின்றன. அடுத்த சில நாள்களில் 10-க்கும் மேற்பட்ட குளங்கள் பணி நிறைவு பெற்றுவிடும். 244 குளங்கள் கண்டறியப்பட்டதில் இந்த பணிகள் 50 சதவீத நிலையை எட்டும்.
வாய்க்கால்கள் தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வுத் திட்ட நிதியின் மூலம் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் குறிப்பிட்ட கி.மீ., நிர்ணயித்து பணிகள் தரப்பட்டுள்ளன. இந்த பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் நேரில் ஆய்வு செய்தபோது, பணிகள் திருப்தியாக மேற்கொள்ளப்பட்டிருப்பதை அறியமுடிந்தது. விரைவாக எடுத்துக்கொள்ளப்பட்ட பணிகளை முடிக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள வடிகால்கள் பெரும்பாலானவை கழிவுகளாலும், ஆகாயத் தாமரை, காட்டாமனக்குச் செடிகள் படர்ந்து உருகுலைந்து காணப்படுகின்றன. பல இடங்களில் ஆக்கிரமிப்புகளாலும் வடிகால்கள் பாதித்துள்ளன. இதை சுத்தப்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் சிறப்புத் திட்டம் வகுத்துள்ளது. அதிகாரிகளை அழைத்துப் பேசியுள்ளோம். இந்த வடிகால்களை தூர்வார மதிப்பீடு தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்குப் பின் இந்த திட்டப் பணிகளும் தொடங்கிவிடும்.
வடிகால்கள் எந்த இடத்தில் நிறைவடைகிறதோ, அந்த பகுதியிலிருந்து தூர்வாரும் பணியை தொடங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. 
இந்த பணி நிறைவுபெற்றால், மழைக் காலங்களில் தண்ணீர் சாலை உள்ளிட்ட எந்த பகுதியிலும் தேங்க வாய்ப்பிருக்காது. காரைக்கால் பகுதிக்குள் காவிரி நீர் நுழைய பிரதான ஆறாக நாட்டாறு உள்ளது. இது தமிழகப் பகுதியில் தூர்வாரப்படாமல் அடைப்பு இருப்பதால், காரைக்காலுக்கு தண்ணீர் வரத்தில் பாதிப்பு ஏற்படுமென கருதப்பட்டது. இதுதொடர்பாக, தமிழக அரசு நிர்வாகத்துக்கு, காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மூலம் கடிதம் எழுதப்பட்டதன் விளைவாக நாட்டாறு தூர்வாரப்படுவதாக தகவல் வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
காரைக்காலில் நம் நீர் திட்டத்தின் மூலம் குளங்கள், வாய்க்கால் தூர்வாரும் பணி இதுவரை சிறப்பாக நடந்துள்ளது. இந்த நீர் நிலைகளை அந்தந்த பகுதியினர் பாதுகாத்துக்கொள்ளவேண்டும். இது காரைக்கால் மக்களின் நீராதாரத்துக்கு உகந்தது என அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறோம். மக்களிடையே நமது பகுதி நீர் நிலையை நாம் தான் பாதுகாக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படுவதே முக்கியமாகும். இதன் மூலம் செய்கின்ற திட்டப் பணி முழு வெற்றியடையும் என்றார் ஆட்சியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலூரில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை

காய்கறி, அத்தியாவசிய பொருள்கள் விலை கடும் உயா்வு

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு இன்று விடுமுறை

7 முக்கிய நகரங்களில் 23% உயா்ந்த வீடுகள் விலை

அசோக் லேலண்ட் விற்பனை 10% சரிவு

SCROLL FOR NEXT