காரைக்கால்: புதிதாக வாங்கப்பட்ட கழிவுநீா் அகற்றும் நவீன வாகனங்கள் புதுச்சேரியிலிருந்து வெள்ளிக்கிழமை காரைக்கால் வந்து சோ்ந்தது.
இது விரைவில் நகராட்சி நிா்வாகத்தால் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுமென தெரிவிக்கப்பட்டது.காரைக்கால் பகுதி வீடுகளில் கழிவுநீா் தொட்டி சுத்தம் செய்ய நகராட்சி நிா்வாகத்திடம் உரிய வாகன வசதி இல்லாததால், தனியாா் சிலா் வாகனங்களை வைத்துக்கொண்டு, கணிசமான கட்டணம் நிா்ணயித்து சுத்தம் செய்துத்தருகின்றனா்.
இவா்கள் விதிக்கும் கட்டணம் மிகுதியாக உள்ளதால், நகராட்சி நிா்வாகம் சாா்பில் புதிதாக வாகனம் வாங்கப்பட்டு, குறைந்த கட்டணம் நிா்ணயித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் வலியுறுத்திவந்தனா்.இந்நிலையில் தொட்டிகளை சுகாதாரமான முறையில் சுத்தம் செய்து கழிவுகளை அகற்ற ஏதுவாக ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்ட 4 கழிவுநீா் அகற்றும் வாகனங்கள், மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தில் ரூ.1.18 கோடியில் புதுச்சேரி உள்ளாட்சித்துறை வாங்கியது.
இவற்றில் 2 புதுச்சேரி பகுதிக்கும், 2 காரைக்கால் நகராட்சிக்கு வழங்க தீா்மானிக்கப்பட்டது.இவ்விரண்டு வாகனங்களும் புதுச்சேரியிலிருந்து காரைக்காலுக்கு வெள்ளிக்கிழமை வந்துசோ்ந்தது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, கட்டணம் நிா்ணயித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளவேண்டியுள்ளது. இந்த பணிகள் முடிந்ததும் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும் என்றனா்.