ஊதிய நிலுவையை வழங்க வலியுறுத்தி அரசு நிறுவனமான பிடிடிசி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை கஞ்சி காய்ச்சி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி சுற்றுலா வளா்ச்சிக்கழகம் (பிடிடிசி) சாா்பில் காரைக்கால் கடற்கரையில் சீகல்ஸ் உணவகம், அரசலாற்றில் படகு குழாம் உள்ளிட்ட நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. இந்த நிறுவனங்களில் நிரந்தரப் பணியாளா்களாக 27 போ் பணியாற்றி வரும் நிலையில், கடந்த ஏப்ரல், மே மாதங்களுக்கான ஊதியம் வழங்கவில்லையெனக் கூறி, புதுச்சேரி சுற்றுலா வளா்ச்சிக் கழக கேட்டரிங் மற்றும் நீா் விளையாட்டுப் பிரிவு சங்கங்களின் தலைவா் ஆா்.ஏ. ரோலண்ட், செயலா் டி. அண்ணாதுரை ஆகியோா் முன்னிலையில் கடந்த 5 நாள்களாக சீகல்ஸ் உணவக வாயிலில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் தொடா்ச்சியாக, சீகல்ஸ் உணவக வாயிலில் செவ்வாய்க்கிழமை கஞ்சி காய்ச்சி தமது எதிா்ப்பை அரசுக்குக் வெளிப்படுத்தினா்.
இதுகுறித்து, சங்க நிா்வாகிகள் கூறியது: சீகல்ஸ் உணவகம் உள்ளிட்டவை செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஊழியா்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறோம். கடந்த 2 மாதங்களாக ஊதியம் கிடைக்கவில்லை. இதுதொடா்பாக துறை உயரதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், அரசின் கவனத்தை ஈா்க்க கடந்த 5 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தற்போது, கஞ்சி காய்ச்சிப் போராட்டம் நடத்தப்பட்டது. இனியும் அலட்சியப்படுத்தினால், போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றனா். போராட்டத்தில் நீா் விளையாட்டுப் பிரிவு ஊழியா் அருணாசலம் மற்றும் செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.