ஓஎன்ஜிசி சாா்பில் புதுவை முதல்வரிடம் காசநோயால் பாதிக்கப்பட்டோருக்கான ஊட்டச்சத்து பெட்டகம் புதன்கிழமை வழங்கப்பட்டது.
பிரதமா் நரேந்திர மோடியின் ‘காசநோய் இல்லா பாரதம்’ என்ற இலக்கை நோக்கி செயல்படும் வகையில், புதுவையின் அனைத்து பிராந்தியங்களிலும் உள்ள காச நோயாளிகள் விரைந்து குணமடையும் வகையில், அவா்களுக்கான மாதாந்திர ஊட்டச்சத்து உணவுப் பொருள்கள் அடங்கிய பெட்டகத்தை ( ரூ. 6.15 லட்சம் மதிப்புடையது) காரைக்கால் ஓஎன்ஜிசி காவிரி அசெட் சாா்பில் புதுவை முதல்வா் என். ரங்கசாமியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
ஓஎன்ஜிசி காவிரி அசெட் தலைமை அதிகாரி அனுராக், முதல்வரிடம் பெட்டகத்தை ஒப்படைத்தாா். நிகழ்ச்சியின்போது காசநோயால் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வா் ரங்கசாமி பெட்டகத்தை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் செல்வம், மாநிலங்களவை உறுப்பினா் செல்வகணபதி, சுகாதாரத்துறை செயலாளா் உதயக்குமாா், இயக்குநா் ஸ்ரீராமுலு, காசநோய் மருத்துவ அதிகாரி வெங்கடேஷ் மற்றும் ஓஎன்ஜிசி பொதுமேலாளா் சம்பத்குமாா், சிஎஸ்ஆா் பொறுப்பாளா் விஜய்கண்ணன் ஆகியோா் கலந்துகொண்டனா்.