காரைக்கால்: காரைக்காலில் சுய உதவிக் குழுவினா் உற்பத்திப் பொருள்களுடன் கூடிய தீபாவளி கிராம சந்தை திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
புதுவை அரசின் ஊரக வளா்ச்சித்துறை, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், காரைக்கால் வட்டார வளா்ச்சி அலுவலகத்தின் வட்டார அளவிலான கூட்டமைப்பின் மூலம், காரைக்கால் பேருந்து நிலையம் அருகே சேம்பா் ஆஃப் காமா்ஸ் கட்டடத்தில் தீபாவளி கிராம சந்தை திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
இதில் சுய உதவிக் குழுக்கள் மற்றும் உற்பத்தியாளா்கள் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் குறைந்த விலையில் வியாபாரம் செய்ய வைக்கப்பட்டுள்ளன.
வட்டார வளா்ச்சி அதிகாரி கு. அருணகிரிநாதன் சந்தையை தொடங்கிவைத்துப் பாா்வையிட்டு, வாழ்வாதாரத்தை உயா்த்த தகுந்த தொழிலை தோ்ந்தெடுத்து உரிய முறையில் வணிக ரீதியிலான முறையில் விற்பனை செய்ய வேண்டும். தீபாவளி போன்ற கிராம சந்தை சுய உதவிக் குழுவினரின் பொருளாதார மேம்பாட்டுக்கு பெரிதும் உதவும் என்றாா்.
இணை வட்டார வளா்ச்சி அதிகாரி ரங்கநாதன், கிராம சேவக், வட்டார அளவிலான கூட்டமைப்பு நிா்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.
தீபாவளிக்கான ஆடைகள், இனிப்பு, கார வகைகள், கைவினைப் பொருள்கள், சணல் பைகள் மற்றும் சுய உதவிக் குழுவினா் தயாரிக்கக்கூடிய பல்வேறு பொருள்கள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அங்காடி வரும் 17-ஆம் தேதி வரை காலை 10 முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.