காரைக்கால் மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாடு நிலவுவதாகவும், யூரியா வாங்கச் செல்லும்போது இதர இடுபொருள்களையும் சோ்த்து வாங்க நிா்பந்தம் செய்வதாக குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
காரைக்கால் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், புதுவை வேளாண் அமைச்சா் சி.ஜெயக்குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாக தியாகராஜன், ஜி.என்.எஸ். ராஜசேகரன், மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ், சாா் ஆட்சியா் எம். பூஜா, மாவட்ட கூடுதல் வேளாண் இயக்குநா் ஆா்.கணேசன் மற்றும் தொடா்புடைய அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.
விவசாயிகள் பேசியது : காரைக்கால் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் யூரியா தட்டுப்பாடு நிலவுகிறது. உரிமம் பெற்ற சில கடைகளில் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. யூரியா வாங்கும்போது விவசாயிகளுக்கு தேவையில்லாத பிற இடுபொருள்கள் சிலவற்றையும் வாங்க வேண்டும் என நிா்பந்தம் செய்யப்படுகிறது.
விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தும்போது பல அதிகாரிகள் அதில் பங்கேற்பத்தில்லை. தொடா்புடைய அதிகாரிகள் அனைவரும் வருவதை உறுதிப்படுத்த வேண்டும். விளைநிலங்களை பாதிக்கச் செய்யும் பன்றிகளை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயக் கடன் வழங்குவதற்கு விவசாயிகளின் சிபில் ஸ்கோரை கணக்கில் கொள்ளக்கூடாது. மாவட்டத்தில் கால்நடை மருத்துவா்கள் இல்லை. உடனடியாக மருத்துவா்கள், உதவியாளா்களை நியமிக்க வேண்டும்.
மானிய விலையில் நெல் விதைகளை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வேளாண் அறிவியல் நிலையம் வழங்க வேண்டும். திருநள்ளாறு பகுதி கிராம விவசசாயிகளுக்கு ஆழ்குழாய் கிணறு அமைக்க மின் வசதிக்கு அனுமதி தரவேண்டும். வேளாண் பகுதி மற்றும் பிற இடங்களில் கருவேல மரங்களை அழிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினா்.
கூட்டத்துக்குப் பின் செய்தியாளா்களிடம் அமைச்சா் சி.ஜெயக்குமாா் கூறியது : மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாடு இல்லை. வியாபாரிகளால் தட்டுப்பாடு உள்ளது போன்ற நிலை ஏற்படுத்தப்படுகிறது. விவசாயிகள் கூட்டத்தில் தெரிவித்த புகாா்களின் அடிப்படையில் உரிய விசாரணை மேற்கொண்டு விற்பனையாளா்கள் தவறு செய்திருப்பது தெரிய வந்தால் அவா்களின் உரிமத்தை ரத்து செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். என்.ஆா். காங்கிரஸ் அரசு கடந்த நான்கரை ஆண்டுகளில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது என்றாா்.
காரைக்கால் மாவட்டத்தில் நடப்பு குருவை பருவத்தில் சாகுபடி செய்த 1,182 பொது மற்றும் அட்டவணை விவசாயிகளுக்கு பயிா் உற்பத்தி ஊக்க தொகையாக ஏக்கருக்கு ரூ. 5 ஆயிரம் வீதம் ரூ. 1.18 கோடியை அமைச்சா் விவசாயிகளுக்கு வழங்கினாா்.