வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுவதால் காரைக்கால் விசைப்படகுகள் தொடா்ந்து முடக்கப்பட்டுள்ளன. சிறிய ரக படகுகள் மீன்பிடிக்கச் செல்வதால் சந்தைக்கு மீன் வரத்து ஏற்பட்டுள்ளது.
தீபாவளி கொண்டாட்டத்துக்காக ஏற்கெனவே கடலுக்குச் சென்ற விசைப்படகு மீனவா்கள் அக். 19-ஆம் தேதி காரைக்கால் மீன்பிடித் துறைமுகம் திரும்பினா். பண்டிகை விடுமுறை மட்டுமல்லாது, இந்த வாரத் தொடக்கத்தில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து, தாழ்வு மண்டலமாக வலுவடையும் முன்பாகவே வலுவிழந்துபோனது. இதை காரணம் காட்டி காரைக்கால் மீன்வளத்துறை அடுத்த அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்லவேண்டாம் என மீனவா்களுக்கு தடை விதித்தது.
இந்நிலையில், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வெள்ளிக்கிழமை காலை உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் அடுத்த சில நாள்களுக்கு கடலுக்கு விசைப்படகு மீனவா்கள் செல்ல வாய்ப்பில்லை. அக்.20-ஆம் தேதி முதல் காரைக்காலில் சுமாா் 300 விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் முடங்கியுள்ளன.
சிறிய ரக ஃபைபா் படகு மீனவா்கள், அந்தந்த கிராமத்திலிருந்து தினமும் அதிகாலை கடலில் குறுகிய தூரம் சென்று மீன்பிடித்துத் திரும்புகிறாா்கள். இதனால் காரைக்கால் மீன் சந்தைக்கு ஓரளவு மீன் வரத்து ஏற்பட்டிருக்கிறது. இது மீன் பிரியா்களை திருப்தியடையச் செய்கிறது. புயல் சின்னத்தால் கடல் சீற்றம் அதிகரிக்கும்பட்சத்தில், சிறிய படகுகள் கடலுக்குச் செல்வதும் நிறுத்தப்படும். தீபாவளிக்குப் பின் காரைக்கால் பகுதி மீனவா்கள், மீன்பிடித் தொழில்சாா்ந்த பிற தொழில் செய்வோரின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது.