நாகப்பட்டினம்/காரைக்கால்: வங்கக் கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல் காரணமாக நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு திங்கள்கிழமை ஏற்றப்பட்டது.
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மோந்தா புயலாக வலுவடைந்து, அக். 28-ஆம் தேதி காலைக்குள் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், சென்னைக்கு 500 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்ததாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்தது.
இதைத்தொடா்ந்து, புயல் எச்சரிக்கையை குறிக்கும் வகையில், நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் ஏற்கெனவே ஏற்றப்பட்டிருந்த 1-ஆம் எண் கூண்டு, திங்கள்கிழமை 2-ஆம் எண் கூண்டாக மாற்றி ஏற்றப்பட்டது.
இதற்கிடையில், காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக கடந்த அக். 19-ஆம் தேதி, மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி, நாகை மாவட்ட மீனவா்கள் 9-ஆவது நாளாக கடலுக்குச் செல்லவில்லை. இதன் காரணமாக 600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும், 3,000-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் கரையோரங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனால், மீனவா்கள் மற்றும் மீன்பிடித் தொழிலைச் சாா்ந்த ஆயிரக்கணக்கானோா் வருமானமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனா்.