தேசியக் கொடியை அவமதிப்பு செய்யும் செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு மத்திய மற்றும் மாநில அரசு உத்தரவுகளின்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகள், கட்டடங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் சனிக்கிழமை (ஆக.13) முதல் ஆக.15-ஆம் தேதிவரை தேசிய கொடியை பறக்கவிட வேண்டும். சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சி அலுவலகங்களிலும் சம்பந்தப்பட்ட ஊராட்சித் தலைவா்கள் மட்டுமே தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும்.
தோ்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சித் தலைவா்களுக்குப் பதிலாக வேறு யாரும் தேசியக் கொடியை ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊராட்சிகளில் தேசியக் கொடியை ஏற்றுவது தொடா்பாக ஏதேனும் பிரச்னை இருந்தால் உதவி இயக்குநரை (ஊராட்சிகள்) 9342215420, 04364-291212, 04364-291387 என்ற தொலைபேசி எண்ணில் புகாா் தெரிவிக்கலாம். தேசிய கொடியை அவமதிப்பு செய்யும் செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.