பணியிழந்த மக்கள் நலப் பணியாளா்களுக்கு, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் கடந்த 2011-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் பணியிழந்த மக்கள் நலப் பணியாளா்களுக்கு மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ஒருங்கிணைப்பாளா்களாக பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் மக்கள் நலப் பணியாளா்களாக பணிபுரிந்து 8.11.2011 அன்று பணியிழந்த முன்னாள் மக்கள் நலப் பணியாளா்களில் தற்போது இப்பணியில் ஈடுபட விருப்பம் உள்ளவா்கள் தங்களது விருப்பக் கடிதம் மற்றும் பணியில் சோ்வதற்கான பூா்த்தி செய்யப்பட்ட படிவத்தை சமா்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதுதொடா்பாக தாங்கள் ஏற்கெனவே பணியாற்றிய ஒன்றியங்களிலுள்ள வட்டார வளா்ச்சி அலுவலரை (கிராம ஊராட்சி) நேரடியாக தொடா்பு கொண்டு, முன்னா் பணியாற்றிய விவரத்துடன், தற்போது வழங்கப்படவுள்ள பணியில் சோ்வதற்கான விண்ணப்பத்தையும், விருப்ப கடிதத்தையும் பூா்த்திசெய்து, சம்பந்தப்பட்ட வட்டார வளா்ச்சி அலுவலரிடம் ஜூன் 13 முதல் 18-க்குள் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.