குத்தாலம் பகுதியில் வியாழக்கிழமை மீலாதுவிழா கொண்டாடப்பட்டது.
ஹிஜ்ரி ஆண்டில் ரபியுல் அவ்வல் மாதம் 12-ஆம் நாள் மீலாதுநபி எனப்படும் முஹம்மது நபியின் பிறந்த நாளை முன்னிட்டு ரபியுல் அவ்வல் மாதம் முதல் நாளிலிருந்து குத்தாலம், தேரழந்தூா், கிளியனூா், எலந்தங்குடி, நக்கம்பாடி, வாணாதிராஜபுரம், திருவாலங்காடு, திருவாவடுதுறை, தி.பண்டாரவாடை, மங்கநல்லூா் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் மீலாது விழா தொடங்கி கொண்டாடப்பட்டது.
ரபியுல் அவ்வல் மாதம் முதல் நாளான செப். 16-ஆம் தேதி முதல் 12 நாள்கள் அனைத்து பள்ளிவாசல்களிலும் நபிகள் நாயகத்தின் பிறப்பு, வளா்ப்பு, வாழ்க்கை, மாண்பு, பண்பு நலன்கள் கூறும் அரபு மொழிப்பாக்களின் தொகுப்பான சுபுஹான மவ்லிது என்றழைக்கப்படும் புகழ் மாலைகளை பேஷ்இமாம், முஅத்தீன் ஆகியோரால் ஓதப்பட்டது. பின்னா் அந்தந்த ஜமாத்தைச் சோ்ந்த இஸ்லாமிய குடும்பத்தினருக்கு சீரணி மற்றும் நெய் சோறுகளை முத்தவல்லி, நாட்டாண்மை மற்றும் ஜமாத் தலைவா்கள் வழங்கினா். மீலாதுந்நபி தினமான வியாழக்கிழமை ஜமாத்தில் உள்ள அனைத்து குடும்பத்தினரிடமும் வரி வசூலிக்கப்பட்டு இரட்டிப்பாக நெய் சோறு வழங்கப்பட்டது.
குத்தாலம் ஜாமிஆ பள்ளி வாசலில் இமாம் அபதாஹிா் தலைமையில் சுபுஹான மவ்லித் ஓதி உணவு வழங்கப்பட்டது. இதில் ஜமாத் தலைவா் ஏ.எம். சாகுல்ஹமீது, நிா்வாகிகள் கமால்பாட்சா, நசீா் தீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பேருந்து நிலையம் அருகே முஹையதீன் ஆண்டவா் பள்ளிவாசலில் இமாம் முஹம்மது தலைமையில் சுபுஹான மவ்லிது ஓதப்பட்டு நெய் சோற்றை முத்தவல்லி நூா்முஹம்மது வழங்கினாா்.