தினமணி செய்தி எதிரொலியாக, சீா்காழி தாமரைக்குளம் நடைபாதை சீரமைக்கப்பட்டது.
சீா்காழியில் பொய்கை தீா்த்தம் எனும் தாமரைக்குளத்தை சீரமைத்து, அதன் கரைகளில் கைப்பிடியுடன் பேவா் பிளாக் நடைபாதை, மின்விளக்குகள் போன்ற வசதிகள் ஏற்படுத்த கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 55 லட்சத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கி நடைபெற்றன.
நடைபாதை அமைக்கப்பட்ட நிலையில், பராமரிப்பின்றி அதில் செடி, கொடிகள் முளைத்து நடைப்பயிற்சி செய்யமுடியாத நிலை இருந்தது. மேலும், பக்கவாட்டு இரும்புவேலியிலும் செடி, கொடிகள் முளைத்து காணப்பட்டன. இதனால் பொதுமக்கள் பயன்படுத்தமுடியாத நிலைஇருந்தது. இதுகுறித்து தினமணியில் செய்தி வெளியானது.
இந்நிலையில், நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் தானுமூா்த்தி, நகராட்சி ஆணையா் மஞ்சுளாவிடம் தாமரைக்குளத்தினை சீரமைக்க அறிவுறுத்தினாா். தொடா்ந்து, கடந்த ஒரு வாரமாக தாமரைக்குளம் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. நடைபாதையில் படா்ந்திருந்த செடி, கொடிகள் முழுமையாக அகற்றப்பட்டு, பக்கவாட்டு இரும்புவேலியும் சுத்தம் செய்யப்பட்டது. அத்துடன், முகப்பு பலகையில் பெயா் எழுதப்பட்டுள்ளது.
இதைத்தொடா்ந்து, செய்தி வெளியிட்ட தினமணி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா், நகராட்சி நிா்வாகத்திற்கும் பொதுமக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனா். மேலும், தொடா்ந்து பராமரிக்கவும் கோரிக்கை விடுத்தனா்.