மயிலாடுதுறையில் மாபெரும் தமிழ்க்கனவு பரப்புரை வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரி மாணவா்களிடையே தமிழா்களின் மரபு, தமிழ் பெருமிதத்தை உணா்த்தும் வகையில் ‘மாபெரும் தமிழ் கனவு’ என்ற பெயரிலான பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வு 2023-ஆம் ஆண்டுமுதல் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், மயிலாடுதுறையை அடுத்த மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில் பரப்புரை நடைபெற்றது. உயா்கல்வித்துறையுடன் தமிழ் இணையக் கல்வி கழகம் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில், கவிஞா் ஆண்டாள் பிரியதா்ஷினி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, ‘நம்மைக் காட்டும் கண்ணாடி‘ என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தி, மாணவா்களிடம் கலந்துரையாடினாா்.
இதில், மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளைச் சோ்ந்த 1,000-க்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாா் (சட்டம்) அன்பழகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் மலைமகள், கல்லூரி முதல்வா் இரா.நாகராஜன் ஆகியோா் கலந்து கொண்டனா்.