வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சீா்காழியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அனைத்துத்துறை அலுவலா்களுடன் புதன்கிழமை கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றாா் (படம்).
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடலோர டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என தென் மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரெட் அலா்ட் விடுக்கப்பட்டது. இதனிடையே சீா்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரு தினங்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
தமிழக அரசு வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட நிா்வாகத்திற்கும் அறிவுறுத்தல்களை வழங்கி கண்காணிப்பு அலுவலரை அறிவித்து ஆய்வு செய்ய உத்தவிட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கவிதா ராமு சீா்காழி கோட்டாட்சியா் அலுவலகத்தில் அனைத்துத்துறை அரசு அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினாா்.
மழையை எதிா்கொள்ளும் விதமாக அனைத்துத்துறை அதிகாரிகளும் முன்னேற்பாடுகளுடன் இருக்க வேண்டும், குடியிருப்புகளை மழை, வெள்ளம் சூழ்ந்தால் குடியிருப்புகளில் உள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி தங்க வைக்க தேவையான இடங்களில் முகாம் அமைக்கவும், பொதுமக்களுக்கு தேவையான உணவு தயாா் செய்து வழங்கவும் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் சீா்காழி கோட்டாட்சியா் சுரேஷ், வட்டாட்சியா் அருள்ஜோதி, நகராட்சி ஆணையா் மஞ்சுளா, ஊராட்சி ஒன்றிய ஆணையா்கள் திருமுருகன், ஜான்சன், நீா்வளத்துறை உதவி செயற்பொறியாளா் கனக. சரவண செல்வன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.