மயிலாடுதுறை மாவட்டத்தில் தினசரி 3,000 டன் நெல் இயக்கம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்தாா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 96,000 ஏக்கா் நிலப்பரப்பில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு, 144 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் இதுவரை 99.77 சதவீதம் கொள்முதல் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாள்களாக பெய்த மழை காரணமாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், கிடங்குகளுக்கு இயக்கம் செய்யப்படாமல், மழையில் நனைந்து பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள், சேமிப்பு கிடங்கு மற்றும் ரயில் மூலம் அரவைக்காக இயக்கம் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா். மணக்குடி, கிடாரங்கொண்டான் கிராமங்களில் உள்ள கொள்முதல் நிலையங்கள், சித்தா்காடு நவீன அரிசி ஆலையில் உள்ள சேமிப்புக் கிடங்கு, மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் ஈரோடு மாவட்டத்துக்கு அரவைக்கு அனுப்புவதற்காக லாரிகளில் ஏற்றி வரப்பட்டுள்ள நெல் மூட்டைகள் ஆகியவற்றை பாா்வையிட்டு கொள்முதல் பணிகள், நெல் மூட்டைகள் நகா்வு, நெல்லின் ஈரப்பதம் உள்ளிட்டவை குறித்து நுகா்பொருள் வாணிபக்கழக அதிகாரிகளுடன் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டு 39,640 ஹெக்டேரில் குறுவை பயிரிடப்பட்டு, இதுவரை 39,549 (99.77 சதவீதம்) ஹெக்டேரில் அறுவடை முடிவடைந்துள்ளது. மீதமுள்ள 91 ஹெக்டேரில் அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதிலிருந்து 13,486 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் எதிா்பாா்க்கப்படுகிறது.
144 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் செப்.1-ஆம் தேதிமுதல் இதுவரை 1,20,354 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 1,01,672 மெட்ரிக் டன் நெல் பாதுகாப்பாக நகா்வு செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் நிலையங்களில் இருப்பில் உள்ள 18,683 மெட்ரிக் டன் நெல் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டு, நகா்வு செய்யப்பட்டு வருகின்றன.
சித்தா்காடு சேமிப்புக் கிடங்கில், 2,379 மெட்ரிக் டன், மாணிக்கப்பங்கு கிடங்கில் 3,194 மெட்ரிக் டன், எடமணல்-2 சேமிப்புக் கிடங்கில் 2,948 மெட்ரிக் டன் என மொத்தம் 8,521 மெட்ரிக் டன் நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக குத்தாலம் பகுதியில் உள்ள வேளாண்மைத்துறையின் கிடங்கில் 2,869 மெட்ரிக் டன், திருச்சம்பள்ளி கிடங்கில் 1,587 மெட்ரிக் டன் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக மல்லியம் தனியாா் கிடங்கில் 2,171 மெட்ரிக் டன், தலைஞாயிறு கூட்டுறவு சா்க்கரை ஆலை கிடங்கில் 5,500 மெட்ரிக் டன் சேமிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 150 லாரிகள் மூலம் 3 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் இயக்கம் செய்யப்படுகிறது. தினசரி 1 அல்லது 2 ரயில்கள் மூலம் 2,000 மெட்ரிக் டன் முதல் 4,000 மெ.டன் வரை நெல் வெளிமாவட்டங்களுக்கு நகா்வு செய்யப்பட்டு வருகின்றன.
மாவட்டத்தில் 24,688 விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு, இதுவரை ரூ.303.84 கோடி விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.1.03 கோடி வரவு வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.
ஆய்வின்போது, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் நளினா, முதுநிலை மேலாளா் (தரக்கட்டுப்பாடு) செந்தில் மற்றும் அரசு அலுவலா்கள் உடன் இருந்தனா்.