நாகை மாவட்டம், திருக்குவளையில் வியாழக்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீர்வாயப் பணியின்போது பொதுமக்கள் அளித்த 24 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டது.
நாகை மாவட்டத்தில் 1426-ஆம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கி ஜூன் 23-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீர்வாயப் பணிகளுக்கு நாகை மாவட்ட ஆட்சியர் எஸ். சுரேஷ்குமார் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுத் தீர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
அப்போது, திருக்குவளை வட்டத்துக்குள்பட்ட தென்மருதூர், ஆதமங்கலம், கொடியாலத்தூர், பாங்கல், பனங்காடி, கொளப்பாடு, காருகுடி, வலிவலம், அணக்குடி, வடக்குப்பனையூர், தெற்குப்பனையூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் 97 மனுக்களை அளித்தனர்.
இதில், வருவாய்த் தீர்வாயப் பணிகளையொட்டி புதன்கிழமை பெறப்பட்ட மனுக்களில் 15 மனுக்களும், வியாழக்கிழமை அளிக்கப்பட்ட மனுக்களில் 9 மனுக்களுக்கும் உடனடித் தீர்வு அளிக்கும் வகையில், 3 பேருக்கு இயற்கை மரண ஈமச்சடங்கு உதவித் தொகை, 4 பேருக்கு உழவர் பாதுகாப்புத் திட்ட திருமண உதவித் தொகை, 4 பேருக்கு விலையில்லா பட்டா, 9 பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவு, 3 பேருக்கு பட்டா நகல், ஒருவருக்கு குடும்ப அட்டையில் பெயர் திருத்தம் செய்வதற்கான ஆணை ஆகியவற்றை ஆட்சியர் வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக தலைமைக் கண்காணிப்பாளர் பரிமளம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ. செல்வகுமார், திருக்குவளை வட்டாட்சியர் சுதாராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.