நாகை மாவட்ட வருவாய்த் துறை அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் எஸ். சுரேஷ்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம், மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகங்கள், குத்தாலம், செம்பனார்கோவில், மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் ஆட்சியர் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார். வட்டாட்சியர் அலுவலகங்களில் நில அளவை பிரிவு, தேசிய மக்கள் தொகை நிரந்தரப் பதிவு மையம், பொது சேவை மையம் ஆகியவற்றை பார்வையிட்டு, பதிவேடுகளை ஆய்வு செய்த ஆட்சியர், ஆதார் எண் மற்றும் சான்றிதழ்கள் பொதுமக்களுக்குத் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
தரங்கம்பாடி, மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகங்களில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு பணிகள் பிரிவை பார்வையிட்ட ஆட்சியர், நியாயவிலைக் கடைகளில் ஆதார் எண்ணை இணைத்த குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கையையும், ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கையும் பதிவேடுகளுடன் ஒப்பிட்டு, ஆய்வு செய்தார்.
அப்போது, ஸ்மார்ட் கார்டு தயாரானதும், குடும்ப அட்டைதாரர்களின் செல்லிடப் பேசிக்கு கடவுச்சொல் சென்றடைகிறதா என்பதை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின்போது, அலுவலகப் பணிகளில் தொய்வு ஏற்படாத வகையில் அலுவலர்களும், பணியாளர்களும் விரைந்து செயலாற்ற வேண்டும் எனவும், அலுவலக வளாகத்தில் குப்பைகள் சேராமல் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் எனவும் ஆட்சியர் அறிவுறுத்தினார். மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியர் எம். சந்திரன் மற்றும் வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.