மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி விரைவில் தொடங்கும்: ஓ.எஸ். மணியன்
மயிலாடுதுறையில் ரூ. 38.50 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி விரைவில் தொடங்கும் என்று
மயிலாடுதுறையில் ரூ. 38.50 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி விரைவில் தொடங்கும் என்று தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்.
மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-ஆவது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி மேலும் அவர் பேசியது: தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்குகீழ் வசிக்கும் மக்களை மனதில் கொண்டு, திட்டங்களை அறிவித்தவர் ஜெயலலிதா. பெண்கள் யாரையும் சார்ந்து வாழக் கூடாது என்பதால், பெண்களின் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தார். ஜெயலலிதா ஆட்சியில் பெரும்பாலான நலத் திட்டங்கள் பெண்களுக்கே வழங்கப்பட்டன. உலகமே போற்றும் சமூக சேவகியான அன்னை தெரசாவால் தொட்டில் குழந்தை திட்டத்துக்காக பாராட்டைப் பெற்றவர் ஜெயலலிதா.
தமிழகத்தில் நிலவும் பொருளாதார நெருக்கடி, மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை வழங்காமல் உள்ள நிலையிலும், ஜெயலலிதா வழியில், அவர் அறிவித்த திட்டங்களை செயல்படுத்தி ஜெயலலிதாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்படுத்தி வருகிறார்.
11 சட்டப் பேரவை உறுப்பினர்கள் வழக்கிலும், 18 சட்டப் பேரவை உறுப்பினர்கள் வழக்கிலும், அரசுக்கு எதிராக தீர்ப்பு வந்து ஆட்சி கவிழும் என ஸ்டாலின் எதிர்பார்த்தார். ஆனால், எடப்பாடியின் அற்புதமான ஆட்சிக்கு, அவரது அதிர்ஷ்டம் கைகொடுத்தது. அதிமுக ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த திமுகவே தோற்றுப்போனது.
தற்போது, முதலமைச்சர் கனவு தகர்ந்து போனதால் ஸ்டாலின் புலம்பி வருகிறார். கருணாநிதி தனது வாழ்நாளின் கடைசி வரை தவறுதலாக பேசிய வரலாறு இல்லை. ஆனால், ஸ்டாலின் என்ன பேசுகிறார் என்பது அவருக்கே தெரியவில்லை. டிடிவி தினகரனின் கட்சி இந்த தேர்தலோடு காணாமல் போய்விடும்.
மயிலாடுதுறையில் விரைவில், அரசு செலவின்றி விளம்பரதாரர்கள் செலவில், ரூ.38.50 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி தொடங்கவுள்ளது. இதற்கான தொகையை விளம்பரதாரர்கள் பேருந்து நிலைய கட்டடத்தில் விளம்பரம் செய்து பெற்றுக்கொள்வார்கள் என்றார் ஓ.எஸ். மணியன்.
மயிலாடுதுறை சட்டப் பேரவை உறுப்பினர் வீ. ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், எம்.பி. ஆர்.கே. பாரதிமோகன், சீர்காழி சட்டப் பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி, மாவட்ட பொருளாளர் வா. செல்லையன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஏசிஎன். விஜயபாலன், என். ரெங்கநாதன், எம். பூராசாமி, தலைமைக் கழக பேச்சாளர் மணவை மாறன், ஒன்றியச் செயலாளர் பி.சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.