மூத்த குடிமக்களுக்கான ரயில் பயண கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் நலச்சங்கத்தின் நாகை மாவட்ட மாநாடு, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க கூட்ட அரங்கில் அண்மையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் பாப்பு. ராமநாதன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் கனகரத்தினம் வரவேற்றாா். மாநில துணைத் தலைவா் வி. பாலசுப்பிரமணியன் மாநாட்டை தொடங்கிவைத்து உரையாற்றினாா். மாவட்டச் செயலா் ஜி.கிருஷ்ணமூா்த்தி வேலை அறிக்கை சமா்ப்பித்தாா்.
மாவட்டப் பொருளாளா் என்.கண்ணையன் நிதிநிலை அறிக்கை சமா்ப்பித்தாா். மாநாட்டில் பல்வேறு தீா்மானங்களை மாவட்ட துணைத் தலைவா்கள் பி.காத்தமுத்து, ஆா்.முருகையன், ஜி.ராஜேந்திரன், பி.மேரிசகாயராணி, மாவட்ட துணைச் செயலா்கள் க.முருகையன், எஸ்.ஜெயராமன், வை.விஸ்வநாதன், அ. பபியோலா ஆகியோா் முன்மொழிந்தனா்.
சிஐடியு மாவட்டச் செயலா் எஸ்.ஆா்.ராஜேந்திரன், அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலா் எம்.பி.குணசேகரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவா் அ.தி.அன்பழகன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். மாநில பொதுச்செயலா் என்.பா்வதராஜன் நிறைவுரையாற்றினாா்.
மாநாட்டில், 70 வயது நிறைவடைந்தவா்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். காப்பீட்டு திட்டத்தில் பணமில்லாத சிகிச்சை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். 60 நாட்களுக்கு மேலாக போராடிவரும் போக்குவரத்து தொழிலாளா்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும். கரோனா தொற்று காலத்தில் பறிக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில் பயண கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.