திருவாரூர் மாவட்டத்தில் மானாவாரி சாகுபடி செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என அழைப்பு விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூர் மாவட்டத்தில் மானாவாரி சாகுபடியில் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் மற்றும் பருத்தி பயிர்களில் உற்பத்தியை அதிகரித்து மானாவாரி விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க நீடித்த மானாவாரி விவசாயத்துக்கான இயக்கம் என்ற ஒரு சிறப்புத் திட்டம் 2016-17 -இல் தொடங்கி 2019-20 முடிய நான்கு ஆண்டுகளில் ரூ. 3.21 கோடி மதிப்பில் கொரடாச்சேரி, நீடாமங்கலம், மன்னார்குடி, கோட்டூர் வட்டாரங்களில் செயல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தில் தலா 1,000 ஹெக்டேர் மானாவாரி சாகுபடி நிலங்கள் ஒன்று அல்லது இரண்டு கிராம ஊராட்சிகளிலிருந்து தொகுப்பாக தேர்வு செய்யப்பட்டு, முதலாண்டில் 4 தொகுப்புகள் அடுத்த இரு ஆண்டுகளில் தலா 4 தொகுப்புகள் என மொத்தம் 12 தொகுப்புகளில் மொத்தம் 12,000 ஹெக்டரில் செயல்படுத்தப்படவுள்ளது.
நிகழாண்டில் 4 தொகுப்புகள் உருவாக்கப்பட்டு தொகுப்பு மேம்பாட்டுக் குழுக்கள், வட்டார குழுக்கள், விவசாய குழுக்கள் அமைக்கப்பட்டு குழுக்களின் முடிவுகள் ஒருங்கிணைக்கப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேவையான மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்துதல் தொகுப்புக்கு உகந்த பயிர் மேலாண்மை பணிகள் ஆகியவற்றை தொகுப்பு மேம்பாட்டுக்குழு வழிநடத்திச் செல்லும்.
இத்திட்டத்தில் நிகழாண்டில் ஏக்கருக்கு ரூ. 500 வீதம் 10,000 ஏக்கருக்கு, உழவு மானியம் வழங்கப்படும்.
சிறுதானிய பயிர் 125 ஏக்கரில், பயறு வகை 9,625 ஏக்கரில், எண்ணெய் வித் துகள் 250 ஏக்கரில் சாகுபடி செய்யப்படவுள்ளது. இதற்கான விதை மற்றும் உயிர் உரங்கள் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படும். மானாவாரி தொகுப்பில் உற்பத்தி செய்யப்படும் விளைபொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய பயறு உடைக்கும் இயந்திரங்கள், செக்கு இயந்திரங்கள், சிறுதானியங்கள் சுத்திகரிப்பு இயந்திரங்கள் அரசு நிதி உதவியுடன் வழங்கப்படும். படித்து வேலைவாய்ப்பில்லாத கிராமப்புற இளைஞர்கள் மூலம் இயந்திர வாடகை மையம் 80 சதவீத மானியத்தில் செயல்படுத்தப்படும். கால்நடை பராமரிப்புக்காக ஊட்டச்சத்து கலவை விநியோகம் மற்றும் பால் உற்பத்தி உயர்வு பணிக்களுக்காக நிதியுதவி வழங்கப்படும்.
திறன் மேம்பாட்டு பயிற்சி: மானாவாரி மேலாண்மைக்கு தொழில்நுட்ப பயிற்சி முக்கியம். எனவே மாநில அளவில் முதன்மை பயிற்சியாளர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 5 அலுவலர்கள் வீதம் 25 மாவட்டங்களைச் சேர்ந்த 125 அலுவலர்களுக்கு கோவையில் பயற்சியளிக்கப்பட்டுள்ளது.
இதில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேளாண்மை, வேளாண் பொறியியல், கால்நடை பராமரிப்பு, வேளாண் விற்பனை மற்றும் வணிகம் கூட்டுறவு ஆகிய துறைகளைச் சேர்ந்த 5 பேர் பங்கேற்றனர். தொடர்ந்து இப்பயிற்சி மாவட்ட அளவில், வட்ட, கிராம அளவில் திட்ட செயலாக்கக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி பெற்ற முதன்மை பயிற்சியாளர்களால் நடத்தப்படவுள்ளது. திட்டம் குறித்து மேலும் விவரங்கள் அறிய வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை தொடர்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.