திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த சுந்தரக்கோட்டையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி பேருந்து கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்டதை அடுத்து, பாதுகாப்புக் கேட்டு வியாழக்கிழமை மாணவியர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
சசிகலாவின் சகோதரர் வி. திவாகரனுக்குச் சொந்தமான சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரியில் படிக்கும் மாணவியரை கல்லூரிக்கு அழைத்து வர கல்லூரி பேருந்துகள் உள்ளன.
மதுக்கூரை அடுத்துள்ள கீழக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவியருக்கு என ஒரு பேருந்து இயக்கப்படுகிறதாம்.
தினமும் காலையில் மாணவியரை கல்லூரிக்கு அழைத்துச் செல்வதும், மாலையில் இறக்கிவிட்ட பின்னர், கீழக்குறிச்சியில் பொது இடத்தில் நிறுத்திவைத்து விட்டு ஓட்டுநர் ஊருக்கு வந்துவிடுவாராம்.
புதன்கிழமை மாலை மாணவியரை இறக்கிவிட்ட பின்னர், வழக்கம்போல் கீழக்குறிச்சியில் பேருந்தை நிறுத்திவிட்டு வந்த ஓட்டுநர், வியாழக்கிழமை காலை பேருந்தை எடுக்கச் சென்றபோது, முன்பக்க கண்ணாடி, முகப்பு விளக்குகள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து கலலூரி பேருந்து ஓட்டுநர் ராஜ்குமார், மதுக்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மாணவியர் சாலை மறியல்...
இந்நிலையில், கல்லூரி பேருந்தின் முன்பக்க கண்ணாடி, முகப்பு விளக்குகளை உடைத்துச் சேதப்படுத்தியவர்களை கைது செய்யக் கோரியும், கல்லூரி பேருந்தில் பயணம் செய்யும் மாணவியருக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்திடக் கோரியும், செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரி மாணவியர் 3,000-க்கும் மேற்பட்டோர் மன்னார்குடி - பட்டுக்கோட்டை பிரதான சாலையில் சுந்தரக்கோட்டை கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன், கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மன்னார்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் வ. அசோகன், கல்லூரி முதல்வர் எஸ். அமுதா பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, கல்லூரி மாணவியர் தலைவர் தர்ஷனா தலைமையில் மாணவியர் 10 பேர் மன்னார்குடிக்கு வந்து வருவாய்க் கோட்டாட்சியர் எஸ். செல்வசுரபியை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.