மாணவர்களுக்கு கல்வியில் முழு ஈடுபாடு இருக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் கூறினார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற "பாரத பிரதமரின் பார்வையில் 2022' என்ற நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளி மாணவ, மாணவியருடன் மாவட்ட வளர்ச்சி குறித்த கலந்துரையாடலின்போது ஆட்சியர் பேசியது: மாணவ, மாணவியருக்கு கல்வியில் முழு ஈடுபாடு இருக்க வேண்டும். குறிப்பாக, மாணவ, மாணவியர் தாங்கள் கற்றதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசுகள் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகின்றன. இத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். திருவாரூர் மாவட்டம் வேளாண்மை சாகுபடியில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. கிராமப்புற சாலைகளை மேம்படுத்தல், சுகாதாரம், வங்கி பரிவர்த்தனைகளில் விழிப்புணர்வு, தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு ஆகியன குறித்து மாணவ, மாணவியர் தெரிவித்த கருத்துகள், மிகவும் சிறந்த கருத்துகளாக கருதப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்.
கலந்துரையாடலில் அலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளி, அம்மையப்பன் அரசு மேல்நிலைப்பள்ளி, புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளி, கொடிக்கால்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, குளிக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி, திருவாரூர் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வேலுடையார் மேல்நிலைப்பள்ளி, நியூ பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளி, ஆர்.சி. பாத்திமா மெட்ரிகுலேஷன் பள்ளி, மாங்குடி அரசு உயர்நிலைப்பள்ளி, மடப்புரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி, ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 12 பள்ளிகளைச் சேர்ந்த 102 மாணவ, மாணவியர் பங்கேற்று கல்வி, சுகாதாரம், வேளாண்மை, வேலைவாய்ப்பு, சாலை வசதிகள் போன்ற தலைப்புகளில் பல்வேறு கருத்துகளை ஆட்சியரிடம் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தியாகராஜன், முதன்மைக் கல்வி அலுவலர் இரா. சுவாமிநாதன், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் தெய்வபாஸ்கர் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.