திருவாரூர்

பயன்பாடின்றி பயணிகள் நிழலகங்கள்!

DIN

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில் கட்டப்பட்டுள்ள பெரும்பாலான பயணிகள் நிழலகங்கள் பழுதடைந்து, பாதுகாப்பற்ற நிலையில் காட்சியளிக்கின்றன. இவற்றை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். 
கூத்தாநல்லூர் நகராட்சி 5-ஆவது வார்டுக்கு உள்பட்ட கீழப்பனங்காட்டங்குடியில், 20 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய மக்களவை உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயனின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட பயணிகள் நிழலகத்தில் பேருந்துகள் நிற்காததால், பழையனூர், வடக்கட்டளை, கோம்பூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் என அனைவரும் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வேளுக்குடி, வெள்ளையாறு கரையோரத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்து பேருந்தில் ஏறிச் செல்கின்றனர்.
இதேபோல், சுல்தானா ராவுத்தர் மகளிர் கல்லூரியின் அருகே கடந்த 2005-06-ஆம் ஆண்டில், மாவட்ட ஊராட்சித் தலைவராக இருந்த வை.செல்வராஜ் நிதியிலிருந்து கட்டப்பட்ட  பயணிகள் நிழலகம் போதிய பராமரிப்பின்றி, பழுதடைந்த நிலையில் உள்ளது. இங்கும் பேருந்துகள் நிற்பதில்லை எனத் தெரிகிறது. இதனால், மாணவிகள் அருகில் உள்ள நிறுத்தத்துக்கு நடந்து சென்று பயணிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலப்பனங்காட்டங்குடி பயணிகள் நிழலகத்தின் தரை பெயர்ந்தும், இடிந்தும் காணப்படுகிறது. பூதமங்கலம் பயணிகள் நிழலகம் 2012-13-ஆம் ஆண்டு சட்டப் பேரவை உறுப்பினர் நிதியிலிருந்து, கட்டப்பட்டது. இங்கு பேருந்துகள் நின்று சென்றாலும், பயணிகள் நிழலகம் அசிங்கமாகவும், துர்நாற்றம் வீசியபடியும் காட்சியளிக்கிறது. லெட்சுமாங்குடி காவல் நிலையம் எதிரே உள்ள பயணிகள் நிழலகத்தின் முன்பகுதி கரடுமுரடாக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது.
கொரடாச்சேரி பிரதான சாலை, வடபாதிமங்கலம் பிரதான சாலை என இரண்டு பயணிகள் நிழலகத்திலும் எப்போதும் கூட்ட நெரிசல் நிறைந்து காணப்படும். இங்கு ஏராளமானோர் இருசக்கர வாகனங்களை நிறுத்தி விடுவதால் பயணிகள் நிற்பதற்கு கூட சிரமப்படுகின்றனர். மேலும், இந்த பேருந்து நிலையத்தில் மது பிரியர்களும், வழிப்போக்கர்களும் அவ்வப்போது படுத்து தூங்குகின்றனர். இதனால், பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.
லெட்சுமாங்குடி கூட்டுறவு வங்கி அருகே 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பயணிகள் நிழலகம், சுகாதாரமற்ற நிலையில் சாலையை விட்டு சற்று உள்வாங்கி, குழிக்குள் இறங்கியுள்ளது. குடிதாங்கிச்சேரி வளைவில் 2009-10-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழலகத்தின் முன்புறம் உள்ள படிக்கட்டுகள் சேதமடைந்த நிலையில் உள்ளன. இதனால், இந்த படிக்கட்டுகளில் இடித்துக் கொண்டு மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலரும் காயமடைகின்றனர். 
இவ்வாறாக, பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒவ்வொரு பயணிகள் நிழலகமும் யாருக்கும் பயனின்றி பாழாகிக் கொண்டிருக்கின்றன.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நா.பாலசுப்ரமணியன் கூறியதாவது: 
தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கு உள்பட்ட தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் ஊரகப் பகுதிகளில், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால் அவ்வப்போது பயணிகள் நிழலகம் கட்டப்பட்டுள்ளன.
ஆயினும், உள்ளாட்சி அமைப்புகளின் சரியான திட்டமிடல் இல்லாததன் காரணமாக மக்களின் வரிப்பணம் வீணாகிறது.
 போக்குவரத்து அதிகாரிகளின் ஆலோசனைப்படி, அனுமதி பெற்று பயணிகள் நிழலகம் அமைக்கும் உள்ளாட்சி நிர்வாகம், அதற்கான பராமரிப்பு குறித்தும் முடிவு செய்து, அவற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
மேலும், பயன்பாடு இல்லாத பயணிகள் நிழலகங்களை உடனடியாக சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். அதற்கான முயற்சிகளை மாவட்ட நிர்வாகமும், தமிழக உள்ளாட்சித் துறையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக நீரைப் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்க நேரிடும்: அதிஷி

இரவு 7.30 மணிக்கு என்னசெய்வது? கை உதறலோடு அல்லாடிய இளைஞர்கள்!

பூ சூடிய பூ! மீனாக்‌ஷி செளத்ரி..

டி20 உலகக் கோப்பையில் ரிஷப் பந்த் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்: ரிக்கி பாண்டிங்

மஞ்சள் மேகம்! மஞ்சிமா மோகன்..

SCROLL FOR NEXT