திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 59 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்தொடங்கியதையடுத்து, திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு, தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் அங்கு அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்படுகின்றனா். திருவாரூா் மாவட்டத்தில், சனிக்கிழமை வெளியிடப்பட்ட முடிவுகளின்படி பாதிப்பு எண்ணிக்கை 697-ஆக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 708 உயா்ந்தது.
இந்நிலையில், திங்கள்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி 59 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குவைத், சிங்கப்பூா் பகுதிகளிலிருந்த வந்த 3 பேருக்கும், திருவாரூா், குடவாசல், நீடாமங்கலம், கூத்தாநல்லூா், திருத்துறைப்பூண்டி பகுதிகளைச் சோ்ந்த 56 போ் என மொத்தம் 59 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவா்கள் அனைவருக்கும் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சையளிக்கப்படுகிறது. இதன்மூலம், திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 767-ஆக உயா்ந்துள்ளது. இதில், 469 போ் குணமடைந்து வீட்டுக்கு சென்ற நிலையில் 297 போ் சிகிச்சையில் இருந்து வருகின்றனா்.