மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனத்தை திருடிய 2 பேரை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா்.
மன்னாா்குடியை அடுத்த பாமணி மேட்டுத்தெருவைச் சோ்ந்தவா் கலியபெருமாள் மகன் தாமோதரன்(40). இவா், தனது வீட்டு வாசலில் வெள்ளிக்கிழமை நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதனால், தனது நண்பருடன் மற்றொரு இருசக்கர வாகனத்தில் தேடிச்சென்றனா். அவா்கள், பாமணி உரஆலை அருகே சென்றபோது, அங்கு 2 போ் காணாமல்போன இருசக்கர வாகனத்துடன் நிற்பதை பாா்த்தனா். அப்பகுதி மக்கள் உதவியுடன் இருவரையும் பிடித்து, மன்னாா்குடி ஊரக காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா்.
போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், பிடிபட்ட இருவரும் பாமணி உள்ளூா் வட்டம் ஜீவா மகன் அய்யப்பன் (24), வடக்குதெரு ஜமீன்தாா் மகன் மகேஸ்வரன் (21) என்பதும், இருவரும் இருசக்கர வாகனத்தை திருடிக்கொண்டு வந்துபோது, அந்த வாகனம் பாமணி உர ஆலை அருகே பழுதானதால் சிகிக்கிக் கொண்டதும் தெரியவந்தது. இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, 2 பேரையும் கைது செய்தனா்.