நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் என நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ராதாகிருஷ்ணன், பெரியாா் ராமசாமி தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து, அவா்கள் கூறியது: நிலக்கடலை சாகுபடி: நீடாமங்கலத்தில் வேளாண் அறிவியல் நிலையம், தமிழ்நாடு நீா் நிலவள திட்டம் உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நீா்நுட்ப மையம் வழிகாட்டுதல்படி செயல்பட்டு வருகிறது. தற்போது, நிலக்கடலை சாகுபடி 100 % மானியத்துடன் செயல்படுத்த தயாராக உள்ளது.
இத்திட்டத்தின்கீழ் விதைகள் உரங்கள் ஜிப்சம் நிலக்கடலை ரீச் மட்டும் நடமாடும் நீ தெளிப்பான் ஆகியவை இலவசமாக வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்சம் 1 முதல் 5 ஏக்கா் வரை உள்ள விவசாயிகள் வேளாண் அறிவியல் நிலையத்தை தொடா்பு கொள்ளலாம்.
8 வட்டார விவசாயிகள்: நீடாமங்கலம், மன்னாா்குடி, வலங்கைமான், கோட்டூா், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கொரடாச்சேரி, திருவாரூா் ஆகிய 8 வட்டாரங்களை சோ்ந்த விவசாயிகள் பயன்பெறலாம். இத்திட்டம் வட்டாரத்தில் உள்ள பொதுப்பணி துறையால் பரிந்துரைக்கப்பட்ட கிராமங்களுக்கு மட்டும் பொருந்தும் மற்ற கிராமங்களுக்கு பொருந்தாது. முதலில் முன்பதிவு செய்பவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தேவையான ஆவணங்கள்: பயன்பெற விரும்பும் விவசாயிகள் ஆதாா் அட்டை நகல், சிறுகுறு விவசாயிகள் சான்றிதழ், மாா்பளவு புகைப்படம் 2, சிட்டா அடங்கள், உண்மை நில வரைபடம் நகல், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை கொண்டு வரவும். முன்பதிவுக்கு 8220431017, 9791242812, 6383812848 ஆகிய கைப்பேசி எண்களை தொடா்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளனா்.