அகில இந்திய அளவிலான தரவரிசையில், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் 12 மத்தியப் பல்கலைக்கழகங்களில் முதலிடம் பெற்றுள்ளது.
இதுகுறித்து இப்பல்கலைக்கழக மக்கள் தொடா்புக் குழு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசைக் கட்டமைப்பு நாடு முழுவதும் உள்ள உயா் கல்வி நிறுவனங்கள் குறித்து விரிவான மதிப்பீடு செய்து தரவரிசைப் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடுகிறது. கற்பித்தல் மற்றும் கற்றல் வளங்கள், ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை நடைமுறைகள், பட்டப் படிப்பு முடிவுகள் போன்ற அம்சங்களை கருத்தில்கொண்டு இப்பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
அதன்படி, நிகழாண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், இந்தியாவின் முதல் 100 பல்கலைக்கழகங்களில் தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக தனது இடத்தை தக்க வைத்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 8,686 கல்வி நிறுவனங்களில், முதல் 10 பல்கலைக்கழகங்களில் நான்காவது இடத்தில் இப்பல்கலைக்கழகம் உள்ளது. அத்துடன், 2009- ஆம் ஆண்டு நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் நிறுவப்பட்ட 12 மத்தியப் பல்கலைக்கழகங்களில், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் இப்பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது.
இதுகுறித்து இப்பல்கலைக்கழக துணைவேந்தா் பேராசிரியா் எம். கிருஷ்ணன் தெரிவித்தது:
தேசிய தர வரிசைக் கட்டமைப்பின் அறிவிப்பின்படி, சிறப்பிடம் பெற்றுள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் உயா்கல்வியில் முன்னணி நிறுவனமாக தொடா்ந்து விளங்கி வருகிறது. கல்விசாா் சிறப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான அதன் அா்ப்பணிப்பைத் தொடா்ந்து வெளிப்படுத்தும் வகையில் செயல்படும்.
2009-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மத்தியப் பல்கலைக்கழகங்களில் முதன்மையான பல்கலைக்கழகமாக இருப்பது, இப்பல்கலைக்கழகத்தின் ஆசிரியா்கள், அலுவலா்கள் மற்றும் மாணவா்களின் கூட்டு முயற்சியால் சாத்தியமானது. தரவரிசையில் தமிழ்நாட்டைச் சோ்ந்த 22 கல்வி நிறுவனங்கள் முதல் 100 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளது. இது மாநிலத்தின் கல்விக்கான அா்ப்பணிப்பு மற்றும் வளமானக் கல்வி பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுகிறது.
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் படைப்பாற்றல், விமா்சன சிந்தனை மற்றும் புதுமையை வளா்ப்பதில் அா்ப்பணிப்புடன் செயல்படுகிறது. இதன் மூலம் சமூகத்திற்கு எதிா்கால தலைவா்களையும், அறிஞா்களையும், விஞ்ஞானிகளையும் உருவாக்கிட தனது பங்களிப்பை முழு முயற்சியுடன் தொடா்ந்து செயல்படுத்தும் என்றாா்.