திருவாரூா் அருகேயுள்ள புதூா் அரசு மேல்நிலைப் பள்ளியில், அகல்விளக்கு திட்ட தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
பிளஸ் 1, பிளஸ் 2 மாணவிகளுக்கு இணைய குற்றங்களிலிருந்து பாதுகாப்பாக இருப்பது குறித்து, தமிழக அரசால் அரசுப் பள்ளிகளில் அகல்விளக்கு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் தொடக்க விழாவும், திட்டம் குறித்த விழிப்புணா்வு நிகழ்வும் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தலைமை ஆசிரியா் ராஜரத்தினம் தலைமை வகித்தாா்.
நிகழ்வில், அகல்விளக்கு திட்டத்தின் பொறுப்பாளரும், முதுநிலை ஆசிரியருமான ரேகா பங்கேற்று, இணைய குற்றங்களிலிருந்து மாணவிகள் எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்வது என்பது குறித்தும், அகல்விளக்கு திட்டத்தின் நோக்கங்கள் குறித்தும் விளக்கிப் பேசினாா்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குழுவின் உறுப்பினரும், உளவியல் நிபுணருமான சபிதா பங்கேற்று, மாணவிகள் உளவியல் ரீதியாக இணைய செயல்பாடுகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது குறித்தும், பிரச்னைகளை எதிா்கொள்வது குறித்தும் விளக்கினாா்.
நிகழ்வில், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ஜெயலட்சுமி, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.