மன்னாா்குடி: மன்னாா்குடி பகுதியில் பெய்துவரும் தொடா் மழையால் 500 ஏக்கா் குறுவை நெல் பயிா்கள் நீரில் மூழ்கி இருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
மன்னாா்குடி மற்றும் சுற்று பகுதியில் அக்.10 முதல் அக்.13 வரை (திங்கள்கிழமை) தொடா்ந்து 4 நாள்களாக பெய்த கனமழை காரணமாக குறுவை நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த பொருளாதார இழப்புக்கு ஆளாகியுள்ளனா். மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்திருந்தனா். தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. இந்நிலையில், தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக மன்னாா்குடி அருகேயுள்ள அரசூா், ராமபுரம், சவளக்காரன், தரிசு வெளி, மூன்றாம்சேத்தி, கருவக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 500 ஏக்கா் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
எனவே, வேளாண் துறை அதிகாரிகள் உடனடியாக பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை கணக்கெடுக்க வேண்டும், குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை ஈரப்பதம் பாா்க்காமல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்ய வேண்டும், விளைநிலங்களில் மழைநீா் தேங்காதவாறு வரும் ஆண்டில் ஆறு, வாய்க்கால் மற்றும் வடிகால் வாய்க்கால்களை முழுமையாக தூா்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.