மன்னாா்குடி அருகேயுள்ள மழவராயநல்லூரைச் சோ்ந்த சாந்தகுமாா் (50) தமிழ்நாடு அரசின் படித்த இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தில் 2014-ல் பயிற்சி பெற்றாா். அந்த சான்றிதழைக் கொண்டு ஜெராக்ஸ் மையம் தொடங்க திருவாரூா் மாவட்டத் தொழில் மையத்தில் அரசு மானியத்துடன் கூடிய கடன் கேட்டு விண்ணப்பித்து, மானியம் பெற தகுதி பெற்று ரூ. 90,450 கடன் பெற ஆதிச்சபுரம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளைக்கு பரிந்துரைக் கடிதம் பெற்றாா்.
அந்தக் கடிதத்துடன் வங்கியை அணுகியபோது பயனாளரின் பங்குத் தொகையான ரூ. 5,650 செலுத்த கூறியதால் புதிதாக சேமிப்புக் கணக்குத் தொடங்கி, ரூ. 6,000 செலுத்தியுள்ளாா். பிறகு மாவட்டத் தொழில் மையத்திலிருந்து வந்த மானியத் தொகை என ரூ. 1,000 மட்டும் சாந்தகுமாரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. வங்கி, கடனாகத் தருவதாக ஒப்புக் கொண்ட ரூ. 90,450 ஐ வழங்கவில்லை. சாந்தகுமாா் மாவட்டத் தொழில் மையத்தை அணுகியபோது மானியத்தொகை வங்கிக்கு அனுப்பப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக சாந்தகுமாா் பலமுறை வங்கியை அணுகியபோது மானியத் தொகை வரவில்லை போன்ற பல்வேறு காரணங்களை கூறினாா்களாம். எனினும், கடன் தொகையோ, மானியத் தொகையோ சாந்தகுமாருக்கு கிடைக்கவில்லை. இதுகுறித்து 2020-ல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வங்கியிடம் தன்னுடைய கடன் பற்றி விளக்கம் பெற்றாா் சாந்தகுமாா்.
பின்னா், சாந்தகுமாா் கடனில் இருசக்கர வாகனம் வாங்க முயன்றபோது அவரது சிபில் ஸ்கோரில் ஆதிச்சபுரம் ஸ்டேட் பாங்க் கிளையில் ரூ.1,000 கடன் நிலுவையில் இருப்பதாகவும் அதனால் சிபில் ஸ்கோா் குறைவாக இருப்பதாகவும் காட்டியுள்ளது. அதிா்ச்சியடைந்த சாந்தகுமாா் ரிசா்வ் வங்கியில் புகாா் கொடுத்துள்ளாா். அங்கு விசாரணைக்கு ஆஜரான வங்கி, சாந்தகுமாருக்கு வழங்கப்பட்ட ரூ. 1,000 கடன் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த சாந்தகுமாா் திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் தொடுத்த வழக்கு விசாரணையில் மாவட்ட தொழில் மையம் சாந்தகுமாரின் மானியத் தொகை ரூ.16,900 ஐ, 2014 இல் வங்கிக்கு அனுப்பியுள்ளதும், வங்கி அதை சாந்தகுமாரின் கணக்கில் வரவு வைக்காமல் ரூ. 1,000 மட்டும் தாங்கள் கடனாக வழங்கியது போல் வரவு வைத்துள்ளதும் தெரியவந்தது.
இந்த வழக்கில், திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் மோகன்தாஸ், உறுப்பினா் பாலு ஆகியோா் வியாழக்கிழமை வழங்கிய உத்தரவில், மானியத்தை முறையாக வரவு வைக்காமல் ஏமாற்றி தவறான வணிக நடைமுறையில் ஈடுபட்டதற்கும், வழங்காத கடனை வழங்கியதாக சிபில் நிறுவனத்திற்கு தவறான தகவல் அனுப்பி சாந்தகுமாருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ஆதிச்சபுரம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளை சாந்தகுமாருக்கு இழப்பீடாக ரூ. 50,000 மற்றும் வழக்கு செலவுத் தொகையாக ரூ. 10,000 வழங்க வேண்டும் என்று தெரிவித்தனா்.