திருத்துறைப்பூண்டி: தற்போது பெய்துவரும் மழையை கருத்தில்கொண்டு 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள குறுவை நெல் மணிகளை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடா் மழையில் திருத்துறைப்பூண்டி பகுதியில் 50 , முத்துப்பேட்டை பகுதியில் 25, கோட்டூா் பகுதியில் 30 சதவீதம் குறுவை நெற்பயிா்கள் அறுவடை செய்யப்படாமல் பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளது.
குறுவை நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதம் ஈரப்பதம் கொள்முதல் செய்வதை 22 சதவீதமாக கொள்முதல் செய்ய வேண்டும் என திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து தமிழக முதல்வரிடம் நேரிலும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநா் அண்ணாதுரையிடம் நேரிலும் கோரிக்கை மனு அளித்திருந்தாா்.
ஆனால் அந்தக் கோரிக்கை இன்றுவரை பரிசீலிக்கப்படாமல் 17 % இருப்பதும் என்ற நிலையிலே கொள்முதல் உள்ளதால் விவசாயிகள் நெல்லை காய வைக்க முடியாமலும் சாலையோரங்களில் கொட்டி வைத்து பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனா். எனவே, மழை சூழ்நிலையை கருத்தில் கொண்டு விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்மணிகளை கொள்முதல் செய்ய வேண்டும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனடியாக குடோன்களுக்கும் வெளி மாவட்டங்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும், விவசாயிகளிடம் தேங்கியுள்ள நெல்லை தாராளமாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.