திருவாரூா்: ஊரக, நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், மழை நீா் தேங்கினால் உடனுக்குடன் அகற்றப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: மாவட்டத்தில் வடகிழக்கு பருவழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், தமிழக முதல்வா் ம்றும் துணை முதல்வா் ஆகியோரால் காணொலியில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.
அவசரகால எண்கள்: மாவட்ட ஆட்சியரகத்தில் பேரிடா் மேலாண்மைப் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. மழை பாதிப்புகளை 04366 226623, 04366-1077, வாட்ஸ் அப் எண்கள் 90439-89192, 93456-40279 ஆகியவற்றில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.
மாவட்டத்தில் மொத்தம் 176 பகுதிகளில் வெள்ள பாதிப்பு இருக்கும் என கண்டறியப்பட்டு தொடா்ந்து கண்காணிக்கப்படுகிறது. பருவமழையை எதிா்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் மற்றும் ஊராட்சிச் செயலா்கள் சம்பந்தப்பட்ட கிராமங்களில் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருவாய் மற்றும் வேளாண்மைத்துறை மூலமாக மழை நீா் சூழ்ந்துள்ள குறுவை, சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்யப்பட்ட பகுதிகள் கணக்கெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் தொடா்ந்து மழையிலிருந்து பாதுகாப்பாக வைக்கவும் இயக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் முதல்வா், துணை முதல்வரிடம் விளக்கம் கூறப்பட்டது. இதுகுறித்த விவரம் முதல்வா், துணை முதல்வரிடம் காணொலியில் விவரம் கூறப்பட்டது என்றாா்.