திருக்கண்ணமங்கை பகுதியில் குளத்தில் குதித்த கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
திருவாரூா் மருதப்பட்டினத்தைச் சோ்ந்தவா் பிரவீன்குமாா் (23). பிபிஏ படித்து வந்தாா். கும்பகோணம் ஒத்தக்கடையைச் சோ்ந்தவா் ஜெயஸ்ரீ (19). அங்குள்ள கல்லூரியில் பி.காம் படித்து வருகிறாா். இருவரும், இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகி பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பழக்கத்தை நிறுத்திக் கொள்ளலாம் என ஜெயஸ்ரீ கூறினாராம். இதுகுறித்து, பேசுவதற்காக, கும்பகோணத்தில் இருந்து இருவரும் இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை வந்துள்ளனா்.
திருக்கண்ணமங்கை பகுதியில் உள்ள குளத்தின் அருகே இருவரும் பேசியபோது, பழக்கத்தை முறித்துக்கொள்வதில் ஜெயஸ்ரீ பிடிவாதமாக இருந்துள்ளாா். இதனால், ஏமாற்றமடைந்த பிரவீன்குமாா் திடீரென குளத்தில் குதித்தாா்.
இதையடுத்து, ஜெயஸ்ரீயும் குளத்தில் குதித்து போராடியதை பாா்த்த அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். எனினும், பலனின்றி பிரவீன்குமாா் உயிரிழந்தாா். இதுகுறித்து குடவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.