வடக்கு தில்லி ரூப் நகரில் சாலையில் பாதுகாவலுருடன் சென்று கொண்டிருந்த நாயை காரில் வந்தவர்கள் கடத்தி சென்றனர்.
"டிரம்ப்' என பெயரிடப்பட்டுள்ள 9 வயதான அந்த நாய் குறித்த தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. 11 ஆயிரம் சம்மானம் அளிக்கப்படும் என்று அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து தில்லி போலீஸில் நாயின் உரிமையாளர் மஹேந்தர நாத் புகார் அளித்துள்ளார். இதையடுத்து டிரம்பை தில்லி போலீஸார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து தில்லி போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மஹோத்தர நாத்துக்கு சொந்தமான அந்த நாயை அவரது வீட்டு பாதுகாவலர் ஓமிர் புதன்கிழமை மாலை 6.30 மணியளவில் சாலையில் அழைத்துக் கொண்டு சென்றார். அப்போது அங்கு காரில் வந்தவர்கள் திடீரென கதவைத் திறந்து டிரம்பை பிடித்து காரில் ஏற்றியுள்ளனர். வேகமாக சென்ற காரை ஓமிர் பின்தொடர்ந்து சென்றுள்ளார். எனினும் டிரம்பை காப்பாற்ற முடியவில்லை. இதில் ஓமிருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. சிசிடிவி கேமிராவில் டிரம்பை கடத்திய காரின் படம் பதிவாகி உள்ளது. ஆனால் காரின் பதிவு எண் சரியாக தெரியவில்லை. கடத்தப்பட்ட நாய்க்கு வயதாகி உள்ளதால், கண் பார்வை குறைவாக உள்ளது என்று அதன் உரிமையாளர் புகாரில் தெரிவித்துள்ளார் என்று போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.