தெற்கு தில்லியில் இளம் தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை
தெற்கு தில்லியில் இளம் தம்பதியினர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். அவர்களது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
தெற்கு தில்லியில் இளம் தம்பதியினர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். அவர்களது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து தில்லி காவல் துறையினர் வியாழக்கிழமை கூறியதாவது: தெற்கு தில்லி நேப் சராய் பகுதியில் வசித்து வருபவர் ராம் சந்திரா (31). இவரது மனைவி நீத்து (27). இருவருக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று வயதிலும், நான்கு மாதத்திலும் இரு குழந்தைகள் உள்ளனர். ராம் சந்திராவின் தாயும் உடன் வசித்து வருகிறார். தினமும் இரவில் பக்கத்து வீட்டுக்கு ராம் சந்திராவின் தாய் தூங்கச் செல்வார். சம்பவத்தன்று வழக்கம் போல தூங்கச் சென்ற அவர், மறுநாள் காலை வீட்டுக்குத் திரும்பி வந்தார்.அப்போது, வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. வெகுநேரம் குரல் எழுப்பியும் கதவு திறக்கப்படவில்லை.
இதையடுத்து, அக்கம்பக்கத்து வீட்டினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது, தனது மகன் சந்திராவும், மருமகள் நீத்துவும் வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு இறந்து கிடப்பதைப் பார்த்தார். அவர்களின் சடலம் அருகே குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தன. தகவலறிந்ததும் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்த கடிதம் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. அவர்கள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் கூறினார்.