நேபாள பெண் பலாத்கார வழக்கில் 5 பேருக்கு ஆயுள் சிறை
நேபாள நாட்டைச் சேர்ந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டது.
நேபாள நாட்டைச் சேர்ந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் தில்லியில் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்த வழக்கு விவரம் வருமாறு:
நேபாள நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் பஞ்சாபில் வசிக்கும் தனது சகோதரியைக் காண்பதற்காக சம்பவத்தன்று தில்லி வந்தார். தில்லி ரயில் நிலையத்தில் பஞ்சாப் செல்லும் ரயிலை அவர் தவறவிட்டார். இரவாகிவிட்ட நிலையில் அவரை ராகுல் என்பவர் அணுகினார். அப்பெண் இரவில் தங்குவதற்கு ஏற்பாடு செய்வதாகவும், மறுதினம் பஞ்சாப்புக்கு ரயிலில் அனுப்பிவைப்பதாகவும் கூறினார். இதையடுத்து, தனது அறைக்கு அந்தப் பெண்ணை ராகுல் அழைத்துச் சென்றார். பின்னர், தனது கூட்டாளிகள் பால் கிஷண், ஷன்னி, அமன், முகம்மது வாசிம் ஆகியோருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து குற்றம்சாட்டப்பட்ட ஐந்து பேரையும் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையின்போது ஆஜரான ராகுல், தானும், தனது நண்பர்களும் அப்பாவிகள் என்றும் தங்கள் மீது பொய் வழக்குப் புனையப்பட்டுள்ளது என்றும் முறையிட்டார்.
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஏ.டி. அன்சாரி, "இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக மரபணு சோதனை ஆதாரமாக உள்ளது. இதனால், குற்றத்தில் தொடர்புடையவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்' என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ரமேஷ் குமார் அளித்த தீர்ப்பில், "இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. கொடூரமான குற்றத்தில் ஈடுபட்ட ஐந்து பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை அளிக்கப்படுகிறது' என்று நீதிபதி குறிப்பிட்டார்.