புதுதில்லி

மருத்துவர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும்: இந்திய மருத்துவர் சங்கம் வலியுறுத்தல்

DIN

மருத்துவர்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று இந்திய மருத்துவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டாவது முதல்வராக இருந்தவர் பிதான் சந்திரா ராய் ( பி.சி.ராய்). இவர் மருத்துவராகவும் இருந்தவர். தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு நெருக்கமானவராக இருந்ததுடன், அவருடன் இணைந்து நாட்டு விடுதலைக்காகவும் போராடியவர். இவர் தனது வீட்டை ஏழைகளுக்கான மருத்துவமனை கட்டத் தானமாகக் கொடுத்தார். இவர் முதல்வராக இருந்த போதும், தினமும் ஏழைகளுக்கு இலவச மருத்துவம் செய்வதைக் கடமையாகக் கொண்டிருந்தார். இவர், தான் பிறந்த தேதியான ஜூலை 1-ஆம் தேதியிலேயே மரணமடைந்தார். அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் மார்ச் 30-ஆ தேதி மருத்துவர்கள் தினமாகக் கொண்டாடப்படுகின்ற போதிலும், டாக்டர் பி.சி.ராயின் நினைவாக இந்தியாவில் மட்டும் ஜூலை 1-ஆம் தேதி மருத்துவர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 
இந்திய மருத்துவர் சங்கம் சார்பில், தில்லியில் மருத்துவர் தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. ஐடிஓவில் உள்ள சங்கத்தின் தலைமையகத்தில் ரத்த தான முகாம், மருத்துவ முகாம் உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். பின்னர், செய்தியாளர் சந்திப்பின் போது, இந்திய மருத்துவர் சங்கத்தின் தலைவர் ராஜன் சர்மா அளித்த பேட்டி:
மருத்துவர்கள் தங்களது தொழிலை தேச சேவையாகக் கருதிச் செய்கின்றனர். ஆனால், நாட்டில் மருத்துவர்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது. மருத்துவர்கள் மீதான தாக்குதல்கள் இரும்புக் கரம் கொண்டு தடுக்கப்பட வேண்டும்.  மருத்துவத் துறையில் உள்ள அனைவரும் மனித குலத்தின் நன்மைக்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்துப் பணியாற்ற வேண்டும். 
மேலும், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நிதிநிலை அறிக்கையில் மருத்துவர்களுக்கு உகந்த அம்சங்கள் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். மருத்துவத் துறையில் உள்ள கடைநிலை ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த நாளில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரத்தத்தை தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்ய முடியாது. எனவே, அனைவரும் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும். ரத்த தானத்தால் பல உயிர்கள் பாதுகாக்கப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் சூரிய திலக தரிசனம்: கண்கொள்ளா காட்சி

மெரினா அருகே சுறா நடமாட்டம்?

பேரருள்தந்தை பி.ஜான் போஸ்கோ காலமானார்

ரூ.300 கோடி மோசடி வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது

‘தெக்கும் வடக்கும் அகக்கண் திறக்கும்’: கமல்ஹாசன்

SCROLL FOR NEXT