புதுதில்லி

"எம்எல்ஏ பதவியையும் சித்து ராஜிநாமா செய்ய வேண்டும்'

DIN

நவ்ஜோத் சிங் சித்து தனது எம்எல்ஏ பதவியையும் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று தில்லி சீக்கிய குருத்வாரா கமிட்டித் தலைவர் மன்ஜீந்தர் சிங் சிர்சா எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார். இவருக்கும் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங்குக்கும் இடையே மோதல் நிலவி வந்தது. இதனால், இவர் வகித்து வந்த இலாகா பறிக்கப்பட்டு, வேறு இலாகா வழங்கப்பட்டது. இது தொடர்பாக ராகுல் காந்தியைச் சந்தித்து சித்து புகார் அளித்திருந்தார். 
இதைத் தொடர்ந்து, தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த அவர், அது தொடர்பாக ராகுல் காந்திக்கு எழுதிய கடிதத்தை ஞாயிற்றுக்கிழமை அவர் சுட்டுரையில் வெளியிட்டுள்ளார். 
இந்நிலையில், அமைச்சர் பதவியை விட்டு விலகினால் மட்டும் போதாது, எம்எல்ஏ பதவியில் இருந்தும் நவ்ஜோத் சிங் சித்து விலக வேண்டும் என்று மன்ஜீந்தர் சிங் சிர்சா கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது: கர்த்தார்பூர் வழித்தடம் அமைப்பது தொடர்பாக இந்தியா - பாகிஸ்தான் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. 
அப்போது, சீக்கியர்களுக்கு வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தில்லி சீக்கிய குருத்வாரா கமிட்டி சார்பில் விடுக்கப்பட்ட அனைத்துக் கோரிக்கைகளும் ஏற்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு நன்றிகளை சீக்கிய மக்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
சீக்கிய மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில், கர்த்தார்பூர் வழித்தடம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, அதை திசைதிருப்பும் வகையில் நவ்ஜோத் சிங் சித்து தனது ராஜிநாமா கடிதத்தை சுட்டுரையில் வெளியிட்டுள்ளார். ஜூலை 10-ஆம் தேதியிடப்பட்டுள்ள அக்கடிதத்தை 4 நாள்கள் கழித்து ஞாயிற்றுக்கிழமை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? 
காங்கிரஸ் கட்சியின் காந்தி குடும்பத்தினருக்கு நெருக்கமான சித்து, அவர்களைப் போலவே சீக்கியர்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகிறார். கடந்த முறை கர்த்தார்பூர் சென்ற அவர், பாகிஸ்தான் நாட்டின் ராணுவத் தளபதியை கட்டி அணைத்து இந்தியர்களுக்கு பெரும் அவமானத்தைத் தேடித் தந்தார்.
இந்நிலையில், அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக நாடகமாடியுள்ள அவர், நேர்மையானவராக இருந்தால், தனது எம்எல்ஏ பதவியை உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும்.
பஞ்சாப் காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் சித்து இருப்பது உண்மை என்றால், காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற அவர், காங்கிரஸ் எம்எல்ஏவாக இருக்கும் தார்மிக உரிமையை இழந்து விட்டார் என்றார் மன்ஜீந்தர் சிங் சிர்சா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

SCROLL FOR NEXT