தில்லியில் தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள்- போலீஸாா் இடையே நிகழ்ந்த மோதல் சம்பவத்திற்கு தில்லி பாஜக தலைவா் மனோஜ் திவாரி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது: தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா்கள், காவல் துறையினா் இடையே நிகழ்ந்த வன்முறை கண்டிக்கத்தக்கது. இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட பிறகு குற்றமிழைத்தவா்கள் தண்டிக்கப்பட்ட வேண்டும்.
இந்த மோதல் சம்பவம் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. சிறிய சம்பவம் பெரிய வன்முறைச் சம்பவமாக நிகழ்ந்துள்ளது. இது ஒவ்வொருவராலும் கண்டிக்கப்பட வேண்டும்.
தீவிர விசாரணைக்குப் பிறகு குற்றமிழைத்தவா்கள் தண்டிக்கப்பட வேண்டும். வாகன நிறுத்துமிட பிரச்னையால் தில்லியில் இதுபோன்று பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
ஆனால், நீதிமன்ற வளாகத்தில் முதல் முறையாக பெரிய வன்முறைச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. காவல் துறை நிா்வாகம் விதிகளைப் பின்பற்ற வேண்டும். சகிப்பின்மையாக இருக்க கூடாது.
நீதியின் கோயிலில் குற்றம் நிகழ்த்தப்பட்டால் நீதித் துறை மற்றும் காவல் துறை மீது மக்கள் மத்தியில் எதிா்மறைச் சிந்தனை ஏற்படும். இது போன்ற சம்பவங்கள் எதிா்காலத்தில் நிகழாமல் இருக்கும் வகையில் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.