புதுதில்லி

நீதிபதி அகில் குரேஷி விவகாரம்: கொலீஜியத்தின் முடிவு விரைவில் வெளியிடப்படும்: உச்சநீதிமன்றம்

DIN

மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி அகில் குரேஷியை, மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யக் கோரி, மத்திய அரசு திருப்பி அனுப்பிய நிலையில், அதுதொடர்பாக கொலீஜியம் முடிவு எடுத்துவிட்டதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. விரைவில் அந்த முடிவு உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான அகில் குரேஷியை மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் குழு, மத்திய அரசுக்கு கடந்த மே 10-இல் பரிந்துரை செய்திருந்தது. 
ஆனால், அதற்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருவதாக கூறி, குஜராத் உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 
இந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் கடந்த ஜூலை 22-இல் நடைபெற்றபோது, நீதிபதி அகில் குரேஷியின் நியமனப் பரிந்துரை பரிசீலனையில் உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, கொலீஜியத்தின் பரிந்துரை மீது ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்தது. அந்த கெடு முடிந்த நிலையில், ஒரு வாரத்துக்குள் முடிவெடுப்பதாக மத்திய அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. 
இதனிடையே, மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அகில் குரேஷியை நியமிக்கும் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யக் கோரி, அதனை மத்திய அரசு கடந்த மாதம் 28-ஆம் தேதி திருப்பி அனுப்பியது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, நீதிபதி அகில் குரேஷி விவகாரத்தில் கொலீஜியம் முடிவெடுத்துவிட்டது; அது, உச்சநீதிமன்ற இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என்று அந்த அமர்வு தெரிவித்தது.
குஜராத்தில் கடந்த 2010-இல் சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கில், அப்போது மாநில உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவை, போலீஸ் காவலில் இரு நாள்கள் வைக்க நீதிபதி குரேஷி உத்தரவிட்டிருந்தார். மேலும், குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது லோக்ஆயுக்த நியமனத்தில் குஜராத் அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்கினார். 
இவற்றின் காரணமாகவே நீதிபதி குரேஷியை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிப்பதை மத்திய அரசு வேண்டுமென்றே தவிர்ப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT