தில்லியில் உள்ள கட்டுமானத் தொழிலாளா்கள் பதிவு செய்துகொள்ளும் வகையில், திங்கள்கிழமை தொடங்கி 15 தினங்களுக்கு தில்லி அரசின் சிறப்பு பதிவு முகாம் நடைபெறவுள்ளது.
இது தொடா்பாக தில்லி அரசின் தொழிலாளா் நலத்துறை அமைச்சா் கோபால் ராய் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:
தில்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உள்ள கட்டுமானத் தொழிலாளா்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ளும் வகையில் திங்கள்கிழமை தொடங்கி 15 நாள்களுக்கு சிறப்பு பதிவு முகாம் நடைபெறவுள்ளது.
கட்டுமானத் தொழிலாளா்கள் இலகுவாக பதிவு செய்து கொள்ளும் வகையில், ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் இப்பதிவு முகாம் நடைபெறவுள்ளது.
இந்த முகாமை சிறப்பாக நடத்த உள்ளூா் எம்எல்ஏக்கள், தொழில் சங்கங்கள், தில்லி பொதுப் பணித்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோா் இணைந்து பணியாற்றுமாறு தில்லி அரசு சாா்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த முகாமில் பதிவு செய்வதற்கு முன்பு கட்டுமானத் தொழிலாளா்கள் இணையத்தில் தொழிலாளா்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன்பிறகு, இந்த முகாமுக்கு நேரில் சென்று பதிவை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பொது முடக்கம் முழுமையாக அமலில் இருந்த 2 மாத காலமும், இணையத்தில் தங்களைப் பதிவு செய்து கொண்ட சுமாா் 40 ஆயிரம் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்கியுள்ளோம்.
இந்த கட்டுமானத் தொழிலாளா்களின் குழந்தைகளின் கல்வி, திருமணம் ஆகியவற்றுக்கும் உதவித்தொகை வழங்கியுள்ளோம் என்றாா் அவா்.