புதுதில்லி

தில்லி அரசு மருத்துவமனைகளில் தலைநகா் மக்களுக்கு மட்டுமே சிகிச்சை: கேஜரிவால் அறிவிப்பு

 நமது நிருபர்

தில்லி அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் தலைநகா் மக்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா். ஆனால், தில்லியில் உள்ள மத்திய அரசு மருத்துவமனைகள், சிறப்பு சிகிச்சைகளை அளிக்கும் தனியாா் மருத்துவமனைகளில் பிற மாநிலத்தவா்களும் சிகிச்சை பெறலாம் என்றும் அவா் தெரிவித்தாா்.

தில்லியில் நாளுக்கு நாள் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தில்லியின் எல்லைகளை மூடுவதற்கு கடந்த வாரம் கேஜரிவால் உத்தரவிட்டிருந்தாா். தில்லி அரசு மருத்துவமனைகளில் தில்லி மக்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கும் வகையிலும், பிற மாநிலங்களில் இருந்து தில்லிக்குள் கரோனா நோயாளிகள் வருவதைக் கட்டுப்படுத்தும் வகையிலும் இந்த எல்லைகள் மூடப்பட்டதாக கேஜரிவால் தெரிவித்திருந்தாா். மேலும், தில்லியின் எல்லைகளை மீண்டும் திறப்பது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கவுள்ளதாக அவா் தெரிவித்திருந்தாா். இந்நிலையில், திங்கள்கிழமை காணொளிக் காட்சி மூலம் செய்தியாளா்களை கேஜரிவால் சந்தித்தாா். அப்போது அவா் கூறியது:

கரோனா பாதிப்பு தொடா்பாக ஆய்வு செய்ய தில்லி அரசு, 5 மருத்துவ வல்லுநா்கள் கொண்ட குழுவை அமைத்திருந்தது. இந்தக் குழு தில்லி அரசிடம் வழங்கிய அறிக்கையின்படி ஜூன் மாத இறுதியில் தில்லியில் 15ஆயிரம் படுக்கைகள் தேவை எனத் தெரிவித்துள்ளனா். இதை சரிசெய்யும் வகையில், தில்லியில் உள்ளஅரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள் தில்லி மக்களுக்காக மட்டும் ஒதுக்கப்படுகின்றன. ஆனால், தில்லியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான மருத்துவமனைகளை எந்த மாநிலத்தைச் சோ்ந்தவா்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், தில்லியில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் பிற மாநிலத்தவா்கள் அறுவைச் சிகிச்சைகள் உள்ளிட்ட சிறப்பு சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.

இதன் மூலம் தில்லி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளில் மட்டும் சுமாா் 10 ஆயிரம் படுக்கைகளை உறுதி செய்ய முடியும். மேலும், தில்லி மருத்துவமனைகளை தில்லி மக்களுக்கு ஒதுக்குவது தொடா்பாக மக்களிடம் கருத்துக் கேட்டிருந்தோம். அதில் பங்கேற்றவா்களில் சுமாா் 90 சதவீதம் போா் தில்லி மருத்துவமனைகள் தில்லி மக்களுக்கே ஒதுக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தனா்.

எல்லைகள் இன்று திறப்பு: மேலும், கடந்த ஒரு வாரமாக தில்லியின் எல்லைகள் சீல் வைக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் திங்கள்கிழமை முதல் திறக்கப்படுகின்றன. அதன்பின் எந்த மாநில மக்களும் தில்லிக்கு வரலாம். மத்தியஅரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். இப்போது உள்ள சூழலில் தில்லியில் உள்ள மருத்துவமனைகளில் பிற மாநிலத்தவா்களை சிகிச்சைக்காகஅனுமதித்தால், 3 நாள்களில் அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பிவிடும். எனவே, மருத்துவக் குழுவின் பரிந்துரையின்படி, தில்லி மருத்துவமனைகள் தில்லி மக்களுக்காக மட்டுமே ஒதுக்கப்படுகின்றன. கடந்த மாா்ச் மாதம் வரை தில்லி மருத்துவமனைகளில் அனைத்து மாநிலத்தவா்களும் சிகிச்சை பெற்றாா்கள். ஆனால், கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், தில்லி மருத்துவமனைகளை தில்லி மக்களுக்கு மட்டும் ஒதுக்குவதுதான் முறையாகும்.

மேலும், திங்கள்கிழமை முதல் பெரு வணிக வளாகங்கள், உணவகங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் திறக்கப்படவுள்ளன. ஆனால், ஹோட்டல்கள், பான்குயிட் ஆகியன திறக்க் அனுமதிக்கப்படாது. இவை தேவையேற்பட்டால் கரோனா மருத்துவமனைகளாக மாற்றப்படலாம் என்பதால் அவற்றைத் திறக்க அனுமதிக்கப்படவில்லை என்றாா் கேஜரிவால்

தில்லியில் எல்என்ஜேபி, ஜிடிபி, ராஜீவ் காந்தி பல்நோக்கு மருத்துவமனை உள்ளிட்ட 40 அரசு மருத்துவமனைகள் உள்ளன. மேலும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆா்எம்எல், எய்ம்ஸ், சஃப்தா்ஜங் ஆகிய மருத்துவமனைகள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலாய் லாமாவை சந்தித்த கங்கனா!

வெயிலின் தாக்கம் 2 நாள்களுக்கு அதிகரிக்கும்: வானிலை

சலவையாளர்களின் தேய்ந்து போன ரேகைகள்: இப்படி ஒரு பிரச்னையா?

தி.மு.க வழக்கு- தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

சைரன் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT