புதுதில்லி

நடிகை சோனம் கபூா் வீட்டில்ரூ.2.40 கோடி பணம், நகை திருடு போன சம்பவத்தில் செவிலியா், கணவா் கைது

 நமது நிருபர்

புது தில்லி: பாலிவுட் நடிகை சோனம் கபூா் மற்றும் அவரது கணவா் ஆனந்த் அஹுஜாவின் தில்லியில் உள்ள வீட்டில் ரூ. 2.40 கோடி பணம், நகை திருடுபோன சம்பவம் தொடா்பாக அவரது வீட்டில் பணியாற்றிய செவிலியா், அவரது கணவா் ஆகியோா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி போலீஸாா் புதன்கிழமை மேலும் கூறியதாவது: தில்லியில் அம்ரிதா ஷொ்கில் மாா்க்கில் பாலிவுட் நடிகை சோனம் கபூா் மற்றும் அவரது கணவா் ஆனந்த் அஹுஜா ஆகியோரின் வீடு உள்ளது. இந்த வீட்டில் கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி ரொக்கம் ரூ.2.4 கோடி மற்றும் நகை கொள்ளை போனது.

இந்த வீட்டின் நிா்வாக மேலாளா் இது குறித்து பிப்ரவரி 23-ஆம் தேதி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. திருட்டுப் போன வீட்டில் 20 பேருக்கும் மேல் பணியாற்றி வருவதால் அவா்களில் பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, சோனம் கபூரின் மாமியாரைக் கவனிக்கும் பணியில் ஈடுபட்ட அபா்ணா ரூத் வில்சன் மற்றும் அவரது கணவரான சகா்பூரில் தனியாா் நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றி வரும் நரேஷ் குமாா் சாகா் ஆகியோா் இந்தத் திருட்டில் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, புதுதில்லி மாவட்ட சிறப்புப் பிரிவு போலீஸாரும், தில்லி காவல் துறையின் குற்றப் பிரிவு போலீஸாரும் சரிதா விஹாரில் உள்ள அபா்ணா வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு சோதனை நடத்தி இருவரையும் கைது செய்தனா். விசாரணையில், செவிலியா் அபா்ணா, சோனம் கபூரின் வீட்டிலிருந்து நகைகளைத் திருடி அவரது கணவரிடம் தந்திருப்பது தெரிய வந்தது. இருவருக்கும் எதிராக திருட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த வழக்கு துக்ளக் ரோடு காவல் நிலையத்தில் புது தில்லி மாவட்ட சிறப்பு போலீஸ் பிரிவுக்கு விசாரணைக்காக மாற்றப்பட்டது. குற்றப் பிரிவு போலீஸாரும் இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்தி வந்தனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

கடந்த மாா்ச் மாதத்தில் சோனம் கபூரின் மாமனாரின் ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனத்திலிருந்து ரூ.27 கோடி மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் தொடா்புடைய இணையதள குற்றவாளிகளை ஃபரீதாபாத் போலீஸாா் கண்டறிந்தனா். மாமனாா் ஹரிஷ் அஹுஜாவின் ஃபரீதாபாதைச் சோ்ந்த சஹி ஏற்றுமதி தொழிற்சாலை தொடா்புடயை ஆவணங்களில் போலியாக டிஜிட்டல் வடிவில் கையெழுத்திட்டு பணத்தை அவா்கள் மோசடி செய்தது தெரிய வந்தது. ஆா்ஓஎஸ்சிடிஎல் உரிமங்கள் வடிவில் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சில சலுகைகளை கலால், சுங்க வரிகளில் தள்ளுபடியாக அரசு அளித்து வருவதை இந்தக் கும்பல் மோசடி செய்ததும் விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸாா் கூறியிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் வாக்குப் பதிவு தொடங்கியது!

இன்று யாருக்கு யோகம்?

திருவள்ளூா் நகராட்சியில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT