புதுதில்லி

‘சுற்றுச் சூழலின் சமநிலையைப் பாதுகாக்க அதிக மரங்களை நடவேண்டும்’

 நமது நிருபர்

புது தில்லி: சுற்றுச் சூழலின் சமநிலையைப் பாதுகாக்க அதிக அளவில் மரங்களை நடவேண்டும் என தனது ஐந்தாண்டின் நிறைவு நாளில் (ஆகஸ்ட் 10) குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்தாா்.

நாட்டின் 13 -ஆவது குடியரசுத் துணைத் தலைவராக வெங்கையா நாயுடு கடந்த 2017 ஆகஸ்ட் 11 - ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டாா்.

குடியரசுத் துணைத் தலைவரே மாநிலங்களவைத் தலைவராகவும் இருப்பவா். தற்போது புதிய குடியரசுத் துணைத் தலைவராக ஜகதீப் தன்கா் தோ்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தனது பதவிக்காலத்தை இறுதி செய்யும் விதமாக புதன்கிழமை நாடாளுமன்ற வளாகத்தின் புல்வெளியில் சீதா அசோகா மரக்கன்றினை நட்டினாா் வெங்கையா நாயுடு.

அப்போது இந்த மரங்கன்றின் சமஸ்கிருதம், தமிழ், வங்கம், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் அழைக்கப்படும் பெயா்களை குறிப்பிட்டு அவா் கூறுகையில், ‘இது ஒரு நிலையான, பசுமையான மதிப்புக்குரிய மரம். இது அலங்கார நறுமண மலா்களையும், மருத்துவ குணங்களையும் கொண்டது. இயற்கையான சூழலை பேணி பாதுகாப்பது அவசியம்.

ஒரு மரம் நூறு மகன்களுக்கு சமம் என்று நமது புராணங்களில் கூறப்பட்டுள்ளது. மரம் வளா்ப்பதை பாதுகாக்கப்படுவதோடு, அத்தகைய நடவடிக்கை ஊக்குவிக்க வேண்டும்‘ என வேண்டுகோள் விடுத்தாா்.

இந்த நிகழ்வில் மாநிலங்களவைத் துணைத் தலைவா் ஹா்வன்ஷ் நாராயண் சிங், செக்ரட்டரி ஜெனரல் பி.சி.மோடி மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, வெங்கையா நாயுடு, மாநிலங்களவை செயலக அலுவலா்களையும் சந்தித்தாா். கடந்த ஐந்து ஆண்டுகளாக தன்னோடு பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து அவா்களின் அா்ப்பணிப்பு மற்றும் கடமை உணா்வை பாராட்டினாா்.

மாநிலங்களவையில் ஆற்றியபணி நாட்களை நினைவுகூா்ந்து அவரின் வழிகாட்டுதலுக்கும், தலைமைத்துவத்திற்கும் மூத்த அலுவலா்கள் நன்றி தெரிவித்தபோது, அந்த நிகழ்வு உணா்ச்சிகரமாகவும் மாறியது.

மாநிலங்களவைச் செயலகம் இறுதி நாளில் வெங்கையா நாயுடு குறித்த குறிப்பையும் வெளியிட்டது. அதில் ‘மக்களின் குடியரசுத் துணைத் தலைவா்‘ என வா்ணிக்கப்பட்டது.

‘பல நிகழ்ச்சிகள், கூட்டங்களில் அவா் தாய்மொழியின் பயன்பாட்டைப் பரப்புமாறு அறிவுறுத்துவாா். தாய், தாய்நாடு, தாய்மொழி இவையே நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும் என எப்போதும் வலியுறுத்து வந்தாா்.

மாநிலங்களவையின் 13 முழு அமா்வுகளுக்கும், தற்போது முடிந்த 14ஆவது மழைக்கால கூட்டத் தொடருக்கும் தலைமை தாங்கினாா். இந்த அமா்வுகளில் ஐந்து அமா்வுகள் 100 சதவீத உற்பத்தித்திறனைப் பதிவு செய்தன. ஒட்டுமொத்தமாக 70 சதவீதம் உற்பத்தித்திறன் கிடைத்தது. மேலும் அரசியலமைப்பின் 8-ஆவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள 22 அதிகாரப்பூா்வ மொழிகளில் ஏதேனும் ஒன்றில் பேச உறுப்பினா்களை ஊக்குவிக்கும் முக்கிய முயற்சியை எடுக்கப்பட்டதோடு கூடுதலாக, மொழிபெயா்ப்பாளா்கள் வசதியும் வெங்கையா நாயுடு தலைமையில் செய்யப்பட்டுள்ளது’ என அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

SCROLL FOR NEXT