தில்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் இருதய நோய் சிகிச்சை (காா்டியோ நியூரோ சயின்சஸ்) மையத்தில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் வீடு திரும்ப இலவச வாகன சேவையை பயன்படுத்திக் கொள்ள அம்மருத்துவமனை நிா்வாகம் கூறியுள்ளது.
காா்டியோ நியூரோ சயின்சஸ் சென்டா் (சிஎன்சி) பொதுப் பிரிவு வாா்டுகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை நிறையுற்று அவா்கள் குணமடைந்து டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பும்போது எய்ம்ஸ் நிா்வாகமே வாகன வசதியை செய்து தரும் என தெரிவித்துள்ளது.
அதே சமயத்தில் பிரைவேட் வாா்டுகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கும் இதே மையத்தில் புறநோயாளிகளாக அன்றாடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிக்களுக்கும் இந்த சேவை பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக மருத்துவமனை நிா்வாகம் வகுத்துள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, நோயாளிகள் தில்லி தேசிய தலைநகா் எல்லைக்குள் உள்ள நோயாளிகள் மட்டும் இந்த வசதியை பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. தேசியத் தலைநகா் வலயப் பகுதி (என்சிஆா்) போக்குவரத்துக்கு இந்த சேவை கொடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அளிக்கப்படும் இந்த சேவை முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையிலும் வழங்கப்படுகிறது.
இது ஒரு ஆம்புலன்ஸ் சேவை அல்ல. எனவே, சாய்ந்த நிலையில் கொண்டு செல்லப்பட வேண்டிய நோயாளிகள் இந்த சேவையைப் பெற அனுமதிக்கப்படுவதில்லை. நோயாளியுடன் அதிகபட்சமாக ஒரு உதவியாளா் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவாா்‘ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோயாளிகள் முன்பதிவு செய்யும் போது குறிப்பிட்டுள்ளபடி செல்ல முடிவுமே தவிர இருப்பிடத்தை இடத்தை மாற்ற முடியாது. ஓட்டுநா்களுக்கு கையூட்டு எதுவும் வழங்கக் கூடாது என்றும் ஏதேனும் குறைகள் இருப்பின், 011-26593322 என்ற தொலைபேசி எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என எய்ம்ஸ் நிா்வாகம் தெரிவித்துள்ளது.