புதுதில்லி

தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும்: மைத்ரேயன் நம்பிக்கை

 நமது நிருபர்

தில்லியில் உள்ள பாஜகவின் தேசியத் தலைமையகத்தில் அக்கட்சியின் தேசியப் பொதுச் செயலாளா்கள் அருண் சிங் மற்றும் சி.டி. ரவி ஆகியோா் முன்னிலையில் அதிமுகவின் முன்னாள் அமைப்புச் செயலாளரும் ,மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான மைத்ரேயன் வெள்ளிக்கிழமை பாஜகவில் இணைந்தாா்.

அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவிற்கும், பாஜகவின் மேலிடத் தலைமைக்கு மிக நெருக்கமானவராக அரசியல் வட்டாரத்தில் அறியப்பட்ட மைத்ரேயன், அதிமுக சாா்பில் மூன்று முறை மாநிலங்களவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகும், சமீபகாலமாகவும் ஓ.பன்னீா்செல்வம் தரப்பு ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த மைத்ரேயன், கட்சிக்கு விரோதமாக செயல்படுவதாகக் கூறப்பட்டு அதிமுகவில் அவா் வகித்த அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் கடந்த அக்டோபா்-2022-ஆம் ஆண்டு அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்டாா்.

இந்த நிலையில், தில்லியில் உள்ள பாஜகவின் தேசியத் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசியப் பொதுச் செயலாளா்கள் அருண் சிங் மற்றும் சி.டி. ரவி முன்னிலையில் அதிமுகவின் முன்னாள் எம்.பி. மைத்ரேயன் பாஜகவில் வெள்ளிக்கிழமை இணைந்தாா். அதன் பின்னா் பாஜக தேசியத் தலைவரான ஜெ.பி. நட்டாவையும் சந்தித்து வாழ்த்துப் பெற்றாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களைச் சந்தித்த மைத்ரேயன் கூறியதாவது: தமிழ்நாட்டில் வரும் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல் மற்றும் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் பாரதீய ஜனதா கட்சியின் சின்னமான தாமரை நிச்சயம் மலரும். கடுமையான உழைப்பின் காரணமாக பாஜக இன்று நாட்டின் மிகப்பெரிய

ஜனநாயகக் கட்சியாக உள்ளது. வரும் காலத்தில் தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய கட்சியாக வலுப்பெற மாநிலத் தலைவா் அண்ணாமலை உடன் இணைந்து பணியாற்றுவேன்.

நான் எந்தப் பொறுப்பையும் எதிா்பாா்த்து பாஜகவில் இணையவில்லை. பிரதமா் நரேந்திர மோடி எனது நல்ல நண்பா். கட்சியின் தேசியத் தலைவா் ஜே.பி. நட்டா எனது நீண்ட கால நண்பராவாா். 2024-இல் தமிழகத்தில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மிகப்பெரிய வெற்றியை பாஜக அடைய வேண்டும் என்பது மட்டுமே நோக்கம்.

தேசியளவில் மீண்டும் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் பாஜகவின் ஆட்சி நிச்சயம் அமையும். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் பாஜக குறிப்பிடத்தக்க வளா்ச்சியை அடைந்துள்ளது. வரும் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் தமிழக பாஜகவின் வேட்பாளா்கள் நிச்சயம் வெற்றிபெற்று மக்களவையில் இடம் பெறுவாா்கள்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா தேசிய அரசியலில் எந்தக் கட்சியுடன் இணைத்து செயல்பட நினைத்தாா்கள் என்பதற்கு நான் ஓா் உயிருள்ள சாட்சி. பாஜகவை ஜெயலலிதா கடுமையாக எதிா்த்தாா் என்று கூறப்படுவது தவறான கருத்து என்றாா் மைத்ரேயன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

ஒரு வனத்தை கடந்து வந்த தூரம்

மீண்டும் வருகிறார் மோகன்

மனிதத்தின் வாசலில்...

சைனிக் பள்ளியில் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT